குவாட்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுப்பதில் இந்தியா, ஆஸி. சாப்ட் அப்ரோச்..அமெரிக்கா, ஜப்பான் காட்டம்!
டோக்கியா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் பங்கேற்ற குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் மேலாதிக்கம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் இந்த பின்னணியில் குவாட் உச்சி மாநாடு முக்கிய கவனத்தை ஈர்த்தது.
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு முடிவடைந்த போது, அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதம் மற்றும் வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எந்த வகையிலும் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கொவிட் -19 பொருந்தொற்று உலகைச்சுற்றி இன்னமும் மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையிலும், அரசுகளிடையே எதேச்சையான போக்குகள் உள்ளபோதும், உக்ரைனில் சோகமான மோதல் உள்ளபோதும், நாம் உறுதியுடன் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Recommended Video
அதாவது உக்ரைன் நிலவரம் குறித்து கவலை தெரிவித்திருக்கும் குவாட் அமைப்பானது உக்ரைன் நிலைமைக்கு காரணமான ரஷ்யா குறித்து எச்சரிக்கவோ கருத்து தெரிவிக்கவோ முன்வரவில்லை. குவாட் தலைவர்கள் மாநாடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோர் ரஷ்யாவை வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். ஆனால் நமது பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோர் ரஷ்யாவை பகிரங்கமாக குறிப்பிடவில்லை.
அதேபோல் குவாட் உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் கொடூரமான ஆத்திரமூட்டுகிற உக்ரைன் மீதான யுத்தம் மிகப் பெரிய மனிதப்பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் இந்த யுத்தம் தொடருமேயானால் இதற்கு எதிர்வினையாக சர்வதேச நாடுகளை இணைத்து செயல்பட வேண்டிய நிலைமை உருவாகும் என எச்சரித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தால் அப்பாவி பொதுமக்கள் தெருக்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; பல லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் கவலை வெளியிட்டார் ஜோ பிடன்.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அல்லது ஐரோப்பிய கண்டத்தின் பிரச்சனை அல்ல. இது சர்வதேச விவகாரம். நீங்கள் தொலைக்காட்சிகளில் ரஷ்யா என்ன செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். உக்ரைனில் ராணுவ நிலைகளை ரஷ்ய அதிபர் புதின் குறிவைக்கவில்லை. பள்ளிக் கூடங்கள், தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் என உக்ரைனின் கலாசார விழுமியங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறார் புதின். இதற்கு சர்வதேசம் சரியான பதிலடி தரும் என்றும் ஆவேசப்பட்டார் பிடன்.

ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா பேசுகையில், சர்வதேச ஒழுங்கையே ரஷ்யா தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது ஐ.நா.வின் விதிகளுக்கு எதிரானது. இதேபோன்ற ஒரு ஆக்கிரமிப்பை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நாம் அனுமதிக்கக் கூடாது என்றார். ரஷ்யா பாணியில் தைவானை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்கிற பதற்றம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீடிப்பதை சுட்டிக் காட்டினார் கிஷிடா.
ஆனால் பிரதமர் மோடியோ, சுதந்திரமான, வெளிப்படையான இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்திற்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்சனைகளில் அமைதியான தீர்வு ஆகிய கோட்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாகவே கருத்து தெரிவித்தார். பகைமை போக்குகளை ஒழித்தல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் மோடி பேசினார். அதேநேரத்தில் ரஷ்யா அல்லது சீனாவின் பெயரை குறிப்பிட்டு தாக்கிப் பேசுவதை தவிர்த்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் நிலைப்பாட்டையே ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் வெளிப்படுத்தினார்.
இதேபோல் இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பை குவாட் அமைப்பின் தொடர்ச்சியாக உருவாக்கி உள்ளன. இதில் 13 நாடுகள் இணைந்தும் இருக்கின்றன. பொதுவாக ரஷ்யாவை பகிரங்கமாக அமெரிக்காவும் ஜப்பானும் பகிரங்கமாக எதிர்க்கின்றன. அதேநேரத்தில் சீனா விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் கைகோர்த்து கடுமையாக எதிர்த்தும் வருகின்றன. இதனையே குவாட், இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு மாநாடுகள் எதிரொலித்துள்ளன.












Click it and Unblock the Notifications