லேசாக கண் அசைத்த புதின்.. உக்ரைன் மீது குண்டு மழையாக பொழிந்த 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்.. பதற்றம்!
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மீது, சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்ய ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்தியுள்ள மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா வசம் உள்ள பகுதியில் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லியே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே ஆரம்பித்த போர் ஆண்டு கணக்கில் தொடர்கிறது. இரு நாடுகளும் போரை விட்டுவிட்டு அமைதிக்குத் திரும்பும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், முடியாத கதையைப் போல இந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் உக்ரைன் தாக்குதலுக்குப் பழிவாங்குகிறோம் எனச் சொல்லி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

மிகப் பெரிய தாக்குதல்
நேற்று நள்ளிரவு முழுவதும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செர்காசி, கார்கிவ், ஒடெசா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏவுகணைகளும், ட்ரோன்களும் மழை போலப் பொழிந்துள்ளன. விடிய விடியக் கேட்ட பயங்கர வெடிச்சத்தங்களால் மக்கள் அலறியடித்துக் கொண்டு மெட்ரோ நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களுக்குள் தஞ்சமடைந்தனர்.
600 டிரோன்கள், 90 அதிநவீன ஏவுகணைகள் என்று ஒரு மெகா தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இருப்பினும், அதில் 549 ட்ரோன்கள், 55 ஏவுகணைகளை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை தடுத்துவிட்டன. ஆனால், உக்ரைன் வான் பாதுகாப்புப் படையைத் தாண்டியும் மற்ற டிரோன்களும் ஏவுகணைகளும் உக்ரைனைத் தாக்கின.
மெட்ரோ தளம்
மத்திய கீவ் பகுதியில் உள்ள லுக்கியானிவ்ஸ்கா மெட்ரோ நிலையத்தின் தரைத்தள நுழைவாயில் பகுதி, இந்த ஏவுகணைத் தாக்குதல் காரணமாக மிகக் கடுமையாகச் சேதமடைந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த 'க்வாட்ராட்' என்ற பிரம்மாண்ட வணிக மையம் மற்றும் உள்ளூர் சந்தை ஆகியவை முற்றிலும் இடிந்து சாம்பலாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் ஒரு சிறிய காபி ஷாப்பும் முழுமையாக அழிந்தது.. முந்தைய ரஷ்யத் தாக்குதல்களில் ஐந்து முறை இடிந்துபோன பிறகும், அதன் உரிமையாளர்களால் ஆறாவது முறையாக மீண்டும் கட்டப்பட்டு அண்மையில்தான் திறக்கப்பட்டிருந்தது. தற்போது ஏழாவது முறையாக அது அடியோடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாகத் தொடர்கிறது என்பதையே காட்டுகிறது.
உயிரிழப்பு
இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கலை அருங்காட்சியகம், செர்னோபில் அருங்காட்சியகம் மற்றும் வெளியுறவு அமைச்சகக் கட்டிடம் ஆகியவையும் பலத்த சேதமடைந்துள்ளன.
அதிபயங்கர ஏவுகணை
இந்தத் தாக்குதலில் ரஷ்யா தங்களின் மிக விசித்திரமான மற்றும் அதிபயங்கரமான 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒலியின் வேகத்தைப் போல 10 மடங்கு வேகத்தில், அதாவது Mach 10 வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, பூமிக்கு அடியில் மூன்று அல்லது நான்கு தளங்களுக்குக் கீழே பங்கர்களை கூடத் துல்லியமாக அழிக்கக்கூடிய வல்லமை பெற்றது.
பாயும் உக்ரைன்
2024 நவம்பரில் டினிப்ரோ நகரிலும், கடந்த ஜனவரியில் எல்விவ் பிராந்தியத்திலும் பயன்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை, தற்போது 3வது முறையாகக் கீவ் பிராந்தியத்தில் உள்ள பிலா த்செர்கவா நகரை குறிவைத்துத் தாக்கியுள்ளது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா , இந்தத் தாக்குதலைக் கடுமையாகச் சாடியுள்ளார். ரஷ்யா ராணுவத் தளங்களை விடுத்து வேண்டுமென்றே பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் சந்தைகளை இலக்கு வைத்துத் தாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது புதினின் பலத்தைக் காட்டவில்லை, மாறாகப் போர்க்களத்தில் அவர் அடைந்துள்ள பலவீனத்தையே காட்டுகிறது என்று சாடியுள்ளார்.
மறுபுறம், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகமானது தங்களின் ஒரேஷ்னிக் மற்றும் பிற ஏவுகணைகள் உக்ரைனின் ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள், விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவத் தொழிற்சாலைகளை மட்டுமே துல்லியமாகத் தாக்கியதாகத் தங்களின் விளக்கத்தைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications