இந்தியாவை விட்டு கொடுக்காத ரஷ்யா! "முழு சப்போர்ட் தருவோம்.." அதிபர் டிரம்பிற்கு எதிராக காட்டம்
மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே ரஷ்யா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இறையாண்மை கொண்ட அனைத்து நாடுகளுக்கும் தாங்கள் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தேர்வு செய்யும் முழு உரிமை இருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் வாங்கி, அதைத் திறந்த சந்தையில் பெரும் லாபத்திற்கு விற்பனை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இப்படி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே அவர்கள் உக்ரைன் போரைத் தொடர காரணம் என்றும் டிரம்ப் இந்தியாவைச் சாடினார்.

ரஷ்யா சப்போர்ட்
இதற்காக இந்தியாவுக்கு 25% வரி மற்றும் அபராதத்தையும் விதிக்கப்போவதாக அவர் அறிவித்தார். இது இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா வந்துள்ளது. இறையாண்மை கொண்ட நாடுகள் அனைத்தும் தங்களுக்கு விரும்பிய நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்றும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க நாடுகளைக் கட்டாயப்படுத்தும் முயற்சிகளைச் சட்டவிரோதமானது என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சாடியுள்ளார்.
உரிமை இருக்கு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க நாடுகளைக் கட்டாயப்படுத்தும் முயற்சிகளும் வந்துள்ளது பற்றி எங்களுக்குத் தெரியும். இவற்றை சட்டப்பூர்வமானதாக ரஷ்யா கருதவில்லை. வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை, இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டின் நலன்களுக்கும் ஏற்ப, வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குத் தேவையான நாடுகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எல்லா நாடுகளுக்கு உள்ளது" என்றார்.
இந்தியா பதிலடி
டிரம்ப் விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா பதிலடி கொடுத்திருந்ததது. அதாவது இந்த நடவடிக்கை இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முரணானது, முற்றிலும் நியாயமற்றது என்று இந்தியா கடுமையாக விமர்சித்திருந்தது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா தேவையான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அரசியல் ரீதியாக ஆதரிக்கிறோம் என அர்த்தம் இல்லை. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சூழல்கள் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு இது.
வர்த்தக செய்வதாலேயே அனைத்து ரஷ்யச் செயல்பாடுகளையும் இந்தியா ஆதரிப்பதாகக் கருதுவது தவறானது. இந்தியாவின் தேசிய நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் போர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு எடுத்த போதிலும், அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனுமே கூட ரஷ்யாவுடன் எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வர்த்தகத்தைத் தொடர்வதையும் இந்தியா சுட்டிக்காட்டியது.
மாற்றிப் பேசுவது சரியில்லை
மேலும், போர் சமயத்தில் வழக்கமாக இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கச்சா எண்ணெய்யை அனுப்பியதால், வேறு வழியில்லாமலேயே ரஷ்யாவிடம் வாங்க ஆரம்பித்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. அப்போது கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்தியாவின் முடிவை ஆதரித்துவிட்டு, இப்போது அது குறித்து கேள்வி எழுப்புவது தவறான போக்கு என்றும் இந்தியா விமர்சித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வர்த்தகம்
இவ்வளவு பேசினாலும் அமெரிக்காவும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தே வருகிறது. ரஷ்யாவிலிருந்து பல்வேறு பொருட்களைத் தொடர்ந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. அணுசக்தி நிலையங்களுக்கான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சார வாகன உற்பத்திக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அமெரிக்கா இப்போது கூட ரஷ்யாவிடம் இருந்தே வாங்கி வருகிறது.
அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் கூட 2024இல் ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை வர்த்தகம் செய்தது. 2023ல் சேவை வர்த்தகம் 17.2 பில்லியன் யூரோக்களாக இருந்தது. இது இந்தியாவின் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்த வர்த்தகத்தை விட மிகவும் அதிகம். இது போக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து இன்னுமே அதிகமான இயற்கை எரிவாயுவை தொடர்ந்து வாங்கி வருகிறது. இதையும் இந்தியா தனது பதிலடியில் சுட்டிக் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications