18 நாட்களாக நீடிக்கும் யுத்தம்... ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை- போர் ஓயும்?
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் இடைவிடாத யுத்தம் 18 நாட்களாக தொடருகிறது. இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர தீவிரம் காட்டியது, ரஷ்ய தேசிய இனத்தவர் வசிக்கும் மாகாணங்களுக்கான சுயாட்சி அதிகாரம் வழங்குவது ஆகியவற்றை முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 3 வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா இடைவிடாத யுத்தம் நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டின் அனைத்து நகரங்களையும் மூர்க்கமாக தாக்கி வருகிறது ரஷ்யா. இதனால் பல லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் கல்வி கற்க சென்ற பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்திய அரசால் பாதுகப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த யுத்தத்துக்கு பதிலடி தரும் வகையில் மேற்குலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடை அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ஆனால் உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக எந்த ஒரு நாடும் யுத்த களத்துக்கு வரவில்லை.
இதனிடையே ரஷ்யா-உக்ரைன் நாடுகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருநாடுகளிடையே மத்தியஸ்தம் செய்வதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன. இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் போதாவது யுத்தம் முடிவுக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications