கொடூரம்! உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்.. கொந்தளிக்கும் உலக நாடுகள்!
கீவ்: உக்ரைன் போர் 15ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், ரஷ்யா ராணுவம் மரிபோல் நகரில் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாக இதுவரை 3 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்தச் சூழலில் இன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு தரப்புக்கு இடையே இதிலாவது உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது

உக்ரைன் போர்
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தால் கூட, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறையவில்லை. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கீவ், கார்கிவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் நகரங்களில் மீது ரஷ்யா தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள அப்பாவி மக்கள் வெளியேறத் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதனால் அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மரியுபோல் மருத்துவமனை மீது தாக்குதல்
மரியுபோல் நகரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் ரஷ்யா ராணுவம் அனுப்பிய ஏவுகணை ஒன்று மரியுபோல் நகரில் இருந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தாக்கியுள்ளது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், குறைந்தது 17 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான பாதிப்பு
இந்த ராக்கெட் தாக்குதல் மிகப் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக மரியுபோல் நகர சபையினர் தெரிவித்துள்ளனர். மேலும், எரிந்த நிலையில் இருக்கும் கட்டிடங்கள், கார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட பெரிய பள்ளம் எனத் தாக்குதலின் தீவிர தன்மையை உணர்த்தும் வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ரஷ்ய படையெடுப்பு இன்னும் மிருகத்தனமாக மாறும் என மேற்குலக நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறி உள்ளது

குழந்தைகள் காயம்
குழந்தைகள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் இதில் சுக்குநூறாகி சிதறியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மரியுபோல் போலீசார், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலைப் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து மரியுபோல் அதிகாரிகள் கூறுகையில், "குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதை எந்த விதத்தில் சரி. இது நம்பமுடியவில்லை. ரஷ்யா மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளது. இது முழுக்க முழுக்க ஓர் போர்க் குற்றம்" என்று சாடியுள்ளார்.

அச்சம்
இந்த தாக்குதலில் மேலும் பலர் ஈடுபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த ஏவுகணை தாக்குதலில் சிதறிய கண்ணாடிகள் மருத்துவமனையில் இருந்து பல்வேறு குழந்தைகளை முகத்தில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல அங்குப் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை மிகக் கடுமையாகச் சாடியுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தனது தாக்குதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

உலக நாடுகள்
ரஷ்யாவின் இந்த தாக்குதலை உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மீது ராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சாடியுள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர மோசமானது எதுவும் இல்லை. இந்த கொடூர குற்றங்களுக்கு புதின் பொறுப்பேற்றே தீர வேண்டும்" என்று சாடியுள்ளார்.
Recommended Video

பதில் இல்லை
மருத்துவமனைகள் எப்போதும் ராணுவ இலக்காக இருக்கக் கூடாது என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் அப்பாவி மக்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் சாடி வரும் நிலையில், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.அதேநேரம் இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யா சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications