ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க களமிறங்கும் ‘எலிப் படை’... ரஷ்யாவின் புதுமையான திட்டம்
மாஸ்கோ: ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க எலிகளுக்கு நூதனமான பயிற்சி அளிக்க ரஷ்ய ராணுவம் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகின்றனர். எனவே, அவர்களை அளிக்க ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.
அந்தவகையில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புதிய எலிப்படையை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

எலிகள் ராணுவப்படை...
எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. இதற்கு எலிகள் ராணுவப்படை என பெயரிடப்பட்டுள்ளது.

மைக்ரோசிப்...
இதில், எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்று அறுவைச் சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய இயலும். இது உடனுக்குடன் அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும்.

அளவில் சிறியவை...
மோப்பநாய்களை விட உருவத்தில் சிறியதாக இருப்பது எலிகளின் சிறப்பம்சம். எனவே, தீவிரவாதிகளின் கண்களுக்கு புலப்படாமல் அவைகளால் எளிதாக அவர்களது எல்லைக்குள் நுழைந்துவிட முடியும்.

சிறப்புப் பயிற்சிகள்...
அங்கு ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணி வெடிகள், ஆயுதங்கள் இருந்தால், அவற்றை தங்களுடைய நுகர்வு சக்தி மூலம் ராணுவ வீரர்களுக்கு எலிகள் தெரிவித்து எச்சரிக்கை செய்யும். இதற்கென எலிகளுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

விஞ்ஞானிகளின் திட்டம்...
இவ்வாறு பயிற்சி பெறும் எலிகளைக் கொண்டு எலி ராணுவப் படையை உருவாக்கி ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்துவிட முடியும் என்பது ரஷ்ய விஞ்ஞானிகளின் திட்டமாகும். ஆனால், இதில் ஒரு சிக்கலும் உள்ளது.

ஆயுட்காலம் குறைவு...
அதாவது, எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. எனவே, 3 மாதங்களில் அதற்குத் தேவையான பயிற்சிகள் அனைத்தையும் அளித்தால் மட்டுமே அவற்றை ராணுவம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த இயலும்.

தொடர் ஆராய்ச்சி...
அதே நேரத்தில் இளமையான மற்றும் வயது முதிர்ந்த எலிகளையும் இந்த சோதனையில் ஈடுபடுத்த முடியாது. எனவே, உரிய பருவம் உடைய எலிகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்து ரஷியாவின் ரோஸ்டவ் - ஆன் - டன் நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
ஆபத்துக்காலத்தில் உதவி...
இவ்வாறு பயிற்சி பெற்ற எலிகள் தீவிரவாதிகளை அழிக்க மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆபத்துக் காலத்தில் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பூகம்பம் ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்களை சிதறி கிடக்கும் கற்களுக்கு இடையே புகுந்து சென்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என எலிகளின் நுகர்வு சக்தி மூலம் மீட்பு குழுவினர் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications