உக்ரைனில் ரஷ்ய பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை... உயிர் பிரியும் நேரத்திலும் தாக்குதல் பதிவு
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிர் பிரியும் அந்த தருணத்திலும் தாக்குதலை அந்த பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்துள்ளார்.
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவ வீரர்களின் தாயார்களை ஒரு பேருந்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். முகாமில் உள்ள தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது.
அதில் பத்திரிக்கையாளர்களும் செய்தி சேகரிப்பதற்காக பயணித்தனர். அவர்களில் ஒருவராக அனடோலி(68)யும் இடம் பெற்றிருந்தார். இவர் ரஷ்ய தொலைக்காட்சி சேனலான ‘சேனல் ஒன்'ல் கடந்த 40 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர்.
பேருந்து டொனெட்ஸ்க் பகுதிக்கு அருகே உள்ள அவ்டிவ்கா என்ற இடத்தைக் கடந்த போது திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், அனடோலியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ஆனபோதும் தொடர்ந்து தாக்குதலைப் படமாக்கியிருக்கிறார் அவர். ஒளிப்பதிவின் இடையே, ‘என்னால் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இந்தக் கேமராவைத் தாங்கிப் பிடிக்க இயலும் என தெரியவில்லை' என அனடோலி வலியோடு கூறுவதும் பதிவாகியுள்ளது.
உடனடியாக மற்றொரு பத்திரிக்கையாளரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அனடோலி. ஆனால், மருத்துவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.
கடந்த ஏப்ரலில் உக்ரைன் அரசுப் படையினருக்கும், ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட மோதலுக்குப் பின்னர் கொல்லப்பட்டுள்ள 5வது பத்திரிக்கையாளர் அனடோலி என்பது குறிப்பிடத்தக்கது
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது உக்ரைனைக் கோரியுள்ளது.
இந்தப் பயணத்திற்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் ஏற்பாடு செய்திருந்ததாக சேனல் ஒன் செய்தி தெரிவிக்கிறது.