ஜெய் ஷா சிதைத்து விட்டார்.. ரணதுங்கா பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து போனில் பேசிய இலங்கை அதிபர்!
கொழும்பு: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை கடுமையாக விமர்சித்து அர்ஜுன ரணதுங்கா தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது இலங்கை அரசு. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜெய்ஷாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதற்கு பிறகு 2011ஆம் ஆண்டு ஃபைனலில் இந்தியாவிடம் மோதி தோற்றது இலங்கை. இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வி அடைந்து, அரையிறுதிச் சுற்றுக்கே வர முடியாமல் வெளியேறியது இலங்கை அணி. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

மேலும், அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்கால குழு ஒன்றையும் இலங்கை அரசு நியமித்தது. இலங்கை கிரிகெட்டில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுக்கும் முயற்சியாக இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷாவை கடுமையாக விமர்சித்தார்.
இலங்கை கிரிக்கெட்டை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா சிதைத்து வருவதாக அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு வைத்திருந்தார். இலங்கை கிரிக்கெட்டை மறைமுகமாக ஜெய் ஷா நடத்தி வருகிறார். இந்திய உள்துறை அமைச்சரின் மகன் என்பதால் தான் அவர் பலம் பொருந்தியவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் அழுத்தம் தான் இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் எனக் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரணதுங்காவின் கருத்தை மறுத்துள்ளதோடு, அந்தக் கருத்துக்கு வருத்தமும் தெரிவித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் போனில் பேசியுள்ளார் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. இந்தத் தகவலை இலங்கை அமைச்சர் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வியாழக்கிழமை அன்று ஜெய் ஷாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மீது ரணதுங்கா வைத்த குற்றச்சாட்டுக்கு வருத்தமும் தெரிவித்தார். ஜெய் ஷாவை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எங்கள் தரப்பிலும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு தெரிவித்தோம். இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு ஜெய் ஷாவையோ அல்லது பிற நடுகளையோ குற்றம் சொல்வது தவறு" என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications