பெரிய சிக்கலில் இந்தியா.. பெட்ரோல் விலை பிச்சிக்கப்போகுது! ஹர்மூஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்!
தெஹ்ரான்: உலக அளவில், கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்யில், 20-30% ஹர்மூஸ் ஜலசந்தியை கடந்துதான் செல்கிறது. இப்படி இருக்கையில் இதனை மூடிவிட்டால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும். குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஆஸ்பைட்ஸ்’ கடற்படை மிஷன் அதிகாரி ஒருவர் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களுக்கு ரேடியோ மூலம் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தமது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, அந்த எச்சரிக்கைகளில் “எந்தக் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதிக்கப்படாது” என்று கூறப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைச் செய்திகளை ஈரானின் புரட்சிகரப் படையினர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஈரான் இதுவரை இந்த உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாகப் பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வளைகுடா நாடுகளை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் ஒரு முக்கியப் பாதை இது. உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து மையமாகவும் திகழ்கிறது.
உலகளவில் விநியோகிக்கப்படும் எரிசக்தியில் சுமார் 20% இந்த வழியாகத்தான் செல்கிறது என மதிப்பிடப்படுகிறது. தங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தப் பாதையை மூடிவிடுவோம் என ஈரான் பல ஆண்டுகளாகவே அச்சுறுத்தி வருகிறது.
பிராந்தியத்தில் பல வாரங்களாக நிலவிவரும் உச்சக்கட்ட பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த ரேடியோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிக்கும் பதற்றம், வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்கும், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் பாதுகாப்புக்கும் கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, வர்த்தகக் கப்பல்கள் வளைகுடா பகுதிகளைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக ஏஎஃப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான் போன்ற நாடுகளையும் ஈரான் குறிவைத்தது. இந்த ஜலசந்தியில் போக்குவரத்து நிறுத்தப்படுவது அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஈரானிய அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.












Click it and Unblock the Notifications