13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்யலாம்.. ஈரான் சட்டத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு
டெஹ்ரான்: இஸ்லாமிய நாடாக ஈரான் உள்ளது. இந்த நாட்டில் 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை, அவரது தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஈரானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ஈரான்.. எண்ணெய் வளமிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாகும். தற்போது இஸ்ரேல் உடன் ஈரான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றால் இஸ்ரேலுடன் ஈரான் மல்லுக்கட்டி வருகிறது.

ஈரானை பொறுத்தவரை அது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் அதிபராக மசூத் பெசெஷ்கியன் உள்ளார். அதேபோல் சுப்ரீம் லீடராகவும், மத தலைவராகவும் அயதுல்லா காமேனி உள்ளார். இந்த அயதுல்லா காமேனி தான் பெரும் அதிகாரம் படைத்த தலைவர் ஆவார்.
ஈரான் நாட்டின் மக்கள்தொகை என்பது வெறும் 89.8 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) தான். அதாவது சுமார் 9 கோடியாகும். இந்த நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெண்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பெண்களின் தலையாய கடமை என்பது குழந்தைகள் பெற்று கொடுப்பது தான் என்று அங்குள்ள முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
மேலும் ஈரானை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது என்பது மிகவும்குறைவாகும். ஆண்டுக்கு 15 வயதுக்கு உட்பட்ட 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் என்பது நடக்கிறது. அதேபோல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு கூட திருமுணம் செய்து வைக்கப்படுகிறது. இதற்கிடையே தான் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க கடந்த ஆண்டு ஈரான் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகள்களை, அவர்களின் தந்தையே திருமணம் செய்து கொள்ள அந்த புதிய சட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இது அப்போது கடும் சர்ச்சையானது. தற்போது சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரான் இந்த புதிய சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி ஈரானை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள், ‛‛ஈரானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. மன்னராட்சியை விட தற்போது பெண்களுக்கு அதிக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஈரானில் மன்னராட்சி நடைபெற்றபோது பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது. மேலும் விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள் பெற்றிருந்தனர்.
ஆனால் கடந்த 1979ல் நடைபெற்ற ஈரான் புரட்சிக்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறின. பெண்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. தற்போது பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களின் திருமண வயது 15 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications