நைஜீரியாவில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்- 29 பேர் பலி
மைதுகுரி: வடக்கு நைஜீரியாவில் உள்ள மசூதி ஒன்றுக்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ளது அல்ஹாஜி ஹாரூனா மசூதி. நேற்று மதியம் அந்த மசூதியில் மதிய நேர தொழுகை துவங்கியது. அப்போது மசூதிக்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில் தீவிரவாதி மற்றும் மசூதியில் தொழுது கொண்டிருந்த 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக முகமது புகாரி கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பிறகு கூறுகையில், நைஜீரியாவில் அட்டூழியம் செய்து வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளை அழிக்காமல் ஓயமாட்டேன் என்றார்.
அவர் தீவிரவாதிகளை அழிக்க சூளுரை எடுத்த சில மணிநேரத்தில் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகுரியில் முன்னதாக போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.
ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் வடகிழக்கு நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications