இவ்வளவு வேகமா! 257 கிமீ வேகத்தில் வீசும் காற்று.. 2022ன் "பவர்புல்" புயல் இதுதான்.. எங்கே தாக்கும்?
பெய்ஜிங்: இந்த 2022ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த 'ஹின்னம்னோர்' புயல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வேகமாக நகர்ந்து வருகிறது.
இது, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு சீனாவை கடுமையாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதிலிருந்து தப்பிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக பருவநிலைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை என ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில் இனி எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற சக்தி வாய்ந்த புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் மனிதர்களின் நடவடிக்கைகளால் தவிர்க்க இயலாதபடி புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது பல்வேறு நாடுகளில் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவம் தவறிய மழை உள்ளிட்டவை புவி வெப்பமயமாதலால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக வலுவான புயல்களும் உருவாக தொடங்கியுள்ளன. அதன்படி சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் 'ஹின்னம்னோர்' எனும் தீவிர புயல் உருவாகி அது நகர்ந்து வருகிறது.

மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல், 257 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசி வருகிறது. மேலும், இதன் காரணமாக கடலில் சுமார் 15 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்து வருகின்றன. தற்போது இது கிழக்கு சீன கடல் வழியாக நகர்ந்து, ஜப்பானின் தெற்கு தீவுகள் மற்றும் சீனாவின் கிழக்கு கடற்கரையை அச்சுறுத்தி வருகிறது. ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் ரியுக்யு (Ryukyu) தீவுகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த தீவில் மழையானது 200-300 மிமீ அளவிற்கு பெய்யக்கூடும். இது கடும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தும். தீவுகளை இந்த புயல் நெருங்க நெருங்க பாதிப்கள் பெரிய அளவில் இருக்கும். சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற சக்திவாய்ந்த சூறாவளி புயல் ஒன்று ஆப்பிரிக்காவின் தெற்கு கடற்கரையை தாக்கி கடும் சேதத்தை உருவாக்கியது. மட்டுமல்லாது 21 பேரை பலி வாங்கியது. இதனையடுத்து இந்த சூப்பர் புயலின் பாதிப்புகளிலிருந் தப்பிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் புயல்களே இல்லாமல் இரண்டே இரண்டு ஆகஸ்டுகள்தான் இருந்துள்ளன. கடந்த 1961 மற்றும் 1997 ஆண்டுகளின் ஆகஸ்டு மாதங்களில்தான் இங்கு புயல்கள் உருவாகி இருக்கவில்லை என வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஜப்பான் நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை அவ்வப்போது எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த புயலானது கடுமையாக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications