கியரை மாற்றிய தாலிபான்கள்.. "வாங்க.. அரசாங்கத்தில் சேருங்க".. பெண்களுக்கு திடீர் அழைப்பு
அரசாங்கத்தில் சேருங்கள் என்று பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்..!
காபூல்: பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பினையடுத்து, அரசாங்கத்தில் சேருங்கள் என்று பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்..!
ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் மீது தாலிபன் ஆட்சியின் தாக்கம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துவருகின்றன..
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.. பெண்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து வருகிறது..

நம்பிக்கை
"பெண்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் தாங்களே பொறுப்பு, யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. தாலிபான்களின் பழமைவாத சிந்தாந்தங்களோடும், அவர்களின் அடக்குமுறைகளிலும் தங்களால் வாழ முடியாது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருப்பதால் பதற்றம் நீடித்து கொண்டே இருக்கிறது.

அடக்குமுறை
1990களில் ஆட்சியை கைப்பற்றியபோது தாலிபன்கள் பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தநிலையில் மீண்டும் அப்படி ஒரு சூழல் ஏற்படுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.. இந்த 24 மணி நேரத்தில் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று அந்த நாட்டின் பெண் பத்திரிகையாளர்களும் இன்றைய தினம் அச்சம் தெரிவித்திருந்தனர்.

பதற்றம்
அதற்கேற்றபடி, காபூலில் உள்ள ஹமீது கர்சாய் ஏர்போர்ட்டில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.. அந்த ஏர்போர்ட்டே இழுத்து மூடப்பட்டது.. இன்று மீண்டும் விமானங்கள் வந்துசெல்லும் வகையில் பயன்பாட்டுக்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கவும், சில விமானங்கள் இயக்கப்பட்டன. இப்படி ஒரு பரபரப்பும், பதட்டமும், கலக்கமும் அந்த நாட்டைகவ்வியுள்ள நிலையில், அந்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில்தான், அனைவருக்கும் பொதுமன்னிப்பு என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

தாலிபான்
அடுத்ததாக, அரசாங்கத்தில் பெண்கள் சேர வேண்டும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்... அதாவது, தாலிபான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினரான எனமுல்லா சமங்கனி இதுகுறித்து சொல்லும்போது, "இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெண்களை பலியாள் ஆக்க விரும்பவில்லை, ஷரியா சட்டத்தின்படி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.. அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள் தத்தம் பணிகளுக்குத் தயக்கமின்றி திரும்பலாம் " என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

ஆப்கன்
அந்நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதெல்லாம் ஆப்கன் மக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை.. ஏனென்றால், ஆப்கன் மக்களில் சிலர் தாலிபன்கள் பக்கம் நின்றாலும், ஏராளமானோர் தாலிபன்கள் வருகையை விரும்பவில்லை. அதுமட்டுமல்ல, அந்த நாட்டின் இனி பல்கலைக்கழகங்கள், லைப்ரரிகள், கல்விக்கூடங்கள் என்னாகும் என்றும் தெரியவில்லை..

சூழல்
என்ன மாதிரியான கட்டமைப்புடன் ஆட்சி அமைக்கப்படும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், முழுக்க முழுக்க இஸ்லாமிய தலைமையின் கீழ் ஆட்சி அமையும் என்பது மட்டும் தெளிவாகிறது.. அதிலும் கடுமையான சட்டங்களுக்கிடையே மக்கள் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் வியப்பில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications