எழுத்தாளர் பெருமாள்முருகனை வரவேற்கும் ஆவலுடன் அமெரிக்கர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகம் நடத்தும், 'தமிழ்ப்படைப்புகளின் மொழிபெயர்ப்பு வரலாறும் இடம் பெற்ற சர்ச்சைகளும்' எனும் தலைப்பினாலான இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில், எழுத்தாளர் திலீப்குமார், அம்பை, அனிருத்தன் வாசுதேவன், கவிஞர் பெருந்தேவி, பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், அண்ணாமலை, பிரீதா மணி, ஸ்ரீலதா இராமன், மார்த்தா ஷெல்பி, மாத்யூ பாக்ஸ்டர் ஆகியோருடன் இன்னும் பல அமெரிக்க இலக்கிய ஆளுமைகளும் கல்வியாளர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.

The Life of Tamil Literature in Translation: Histories and Controversies conference at Texas

Date:- Friday & Saturday, September 15 & 16, 2017

Time:- 10:00 AM - 4:00 PM Both days.​

Venue:- Meyerson Conference Room (WCH 4.118),

University of Texas at Austin

Austin, Texas 78712

​நிகழ்ச்சி நிரல்:- ​

http://liberalarts.utexas.edu/southasia/events/44186

​பங்கேற்பாளர்களின் முழுவிவரம்:- http://guides.lib.utexas.edu/c.php?g=723109&p=5158100​

ஜெர்மனி நாட்டிலிருக்கும் பெர்லின் நகரில் நிகழ்ந்து வரும் உலக இலக்கியத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவுக்குப் பங்களித்த எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்கிறார்..

பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் "பெருமாள்முருகன்" என்னும் பெயரில் எழுதி வருகிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றி வருகிறார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். சிறப்புமிகு நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கொங்கு வட்டார அகராதி என அவரது படைப்புலகம் வெகுவாக விரிந்திருக்கிறது. தமிழ்ப் படைப்புலகில் மிக முக்கியமானவராகத் திகழ்ந்து வருகிறார்.

பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது, சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் எழுத வந்தவருக்குப் பூங்கொத்து கொடுத்ததுபோல் இவ்விருது அமைந்திருக்கிறது. அண்மையில், அவரது 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டிக் கதை' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான உரிமை, இந்திய ரூபாயில் ஏழு இலக்கத் தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறதெனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமன்றி, தெற்காசிய இலக்கியத்துக்கான 'டிஎஸ்சி விருது'க்கான இறுதிப்பட்டியலில் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.

மாதொருபாகனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவன்தான் இந்த நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும், பெருமாள் முருகனின் 'பூக்குழி' ஆங்கிலத்தில் Pyre என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவின் மிகச் சிறந்த நாவல் என்று இலக்கியத் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு அமையப் பெறவில்லை. அப்போது அவரை வரவேற்கக் காத்திருந்து ஏமாற்றமடைந்த அமெரிக்கத் தமிழர்களிடையே, எழுத்தாளரின் தற்போதைய அமெரிக்க வருகை பெருத்த எதிர்பார்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியிருப்பதோடு, பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வரும் எழுத்தாளர்கள் அம்பை, திலீப்குமார், கவிஞர் பெருந்தேவி உள்ளிட்ட எல்லா படைப்பாளிகளையும் வரவேற்றுப் பயனடையவிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள்முருகன் தம் எழுத்துலக அனுபவம், தாம் எதிர்கொண்ட சவால்கள், கல்வித்துறை அனுபவம் முதலானவற்றைப் பற்றி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். எழுத்தாளர் பெருமாள்முருகனின் அமெரிக்க, ஜெர்மானியப் பயணமானது, கற்றுப்படைப்போர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதையும், அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் படைப்புலகத்தை எவ்வாறு நேசிக்கின்றனரென்பதையும் உலகுக்கு எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Life of Tamil Literature in Translation: Histories and Controversies" international conference will be held at Texas Unisversity. Tamil Writer Perumal Murugan also attend this conference.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற