அமெரிக்காவில் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாருக்கு உதவிய திருடர்கள்
செல்சீ: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் செல்சீ பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க திருடர்கள் உதவி செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் அருகே உள்ள செல்சீ பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு குண்டு வெடித்ததில் 29 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகமது கான் ரஹாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த தெருவுக்கு அருகே உள்ள தெருவில் ரஹாமி ஒரு சூட்கேஸில் குக்கர் குண்டை வைத்துள்ளார். அந்த வழியாக வந்த இரண்டு திருடர்கள் சூட்கேஸை திறந்து அதில் இருந்தது குக்கர் குண்டு என்பது தெரியாமல் அதை வெளியே வீசிவிட்டு சூட்கேஸோடு சென்றுவிட்டனர். அவர்கள் குக்கரை தூக்கி வீசும்போது வயர் ஏதோ அறுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தெருவோரம் கிடந்த குக்கர் குண்டை போலீசார் கைப்பற்றி அப்புறப்படுத்தினர். அந்த குக்கரில் இருந்த செல்போனில் இருந்த எண்களில் ஒன்று ரஹாமியின் குடும்பத்தாருடையது. பின்னர் சமூக வலைதளங்களில் இருந்த குடும்ப புகைப்படங்களில் இருந்து ரஹாமியை போலீசார் அடையாளம் கண்டனர்.
ரஹாமி ஆப்கானிஸ்தானில் பிறந்திருந்தாலும் நியூஜெர்ஸியில் உள்ள எலிசபெத் பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எலிசபெத் பகுதி ரயில் நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி மீது ஒரு பை இருந்தது. 2 திருடர்கள் அதை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 5 குண்டுகள் இருந்தன. உடனே அவர்கள் பையை கீழே போட்டுவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications