"இது ஒன்னும் இந்தியா இல்லை!" அமெரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்திலும் அத்துமீறிய கும்பல்.. பரபரப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டம் நடந்துள்ளது. அங்குச் சீக்கிய சமூகத்தினர் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய நிலையில், அதில் உள்ளே புகுந்து சீக்கியர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிலும் டிரம்ப் வந்த பிறகு, அங்குப் பல்வேறு இடங்களிலும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நியூசிலாந்து நாட்டிலும் இந்தியாவுக்கு எதிராக இனவெறி போராட்டம் நடந்துள்ளது.

நியூசிலாந்தில் போராட்டம்
அங்குத் தெற்கு ஆக்லாந்தில், சீக்கிய மத ஊர்வலத்தைத் தீவிர வலதுசாரி குழுவினர் வழிமறித்ததால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. கிரேட் சவுத் சாலையில் நீல டி-சர்ட் அணிந்த சிலர், ஊர்வலத்தை மறித்துள்ளனர். சீக்கியர்களின் ஊர்வலத்தை மறித்த அந்தக் கும்பல், தங்கள் பாரம்பரிய'ஹாகா' நடனத்தை அங்கு நடத்தி, சீக்கிய ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவர்கள் டெஸ்டினி சர்ச்சின் பாதிரியார் பிரையன் தமாகியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் "ஒரே உண்மையான கடவுள் இயேசு", "ஜீசஸ்-ஜீசஸ்" உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர். இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். நானக்சார் சீக்கிய குருத்வாரா சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது இந்தியா இல்லை நியூசிலாந்து என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.
குழப்பம்
சில நாட்களுக்கு முன்பு அமைதியான முறையில் ஊர்வலம் நடந்தபோது அதில் இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அப்போதும் சீக்கியர்கள் கோபப்படாமல் அமைதியாகவே இருந்துள்ளனர். தங்கள் ஊர்வலத்தில் பிரச்சினை செய்தபோதிலும் சீக்கியர்கள் அமைதி காத்துள்ளனர். இந்தச் சம்பவம், நியூசிலாந்தின் மத சுதந்திரம் மற்றும் பொது அமைதி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இது நியூசிலாந்து
இது குறித்த வீடியோவை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அதில் அவர்கள், "இது எங்கள் நிலம். இதுவே எங்கள் நிலைப்பாடு. உண்மையான தேசபக்தர்கள் தெற்கு ஆக்லாந்தில் தங்கள் உரிமைகளுக்காக நின்றுள்ளனர். வன்முறை இல்லை. கலவரங்கள் இல்லை. இது எங்கள் நாடு இந்தியா இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் காட்டியுள்ளோம்.
நியூசிலாந்தின் மனுரேவாவின் சில பகுதிகள் சீக்கியர்கள், காலிஸ்தான் பயங்கரவாதிகள், வாள்கள் மற்றும் கத்திகளை ஏந்திக் கொண்டு இருக்கிறார்கள். வெளிநாட்டினர் மற்றும் பயங்கரவாதிகள் தங்கள் கொடிகளைப் பறக்கவிட்டாலும், நாங்கள் ஒரு நாடாக நியூசிலாந்து சார்பில் ஒற்றுமையாக முக்கியமான விஷயத்தை அவர்களுக்கு நினைவூட்டினோம்.. இது நியூசிலாந்து. இவை எங்கள் தெருக்கள். இது நிலம்" என்று பதிவிட்டுள்ளனர். நியூசிலாந்தில் பயங்கரவாதிகள் தங்கள் கொடிகளைப் பறக்கவிடுவதாக அவர் குற்றஞ்சாட்டினாலும், அதற்கான ஆதாரம் எதையும் அவர் பகிரவில்லை.
மாவோரி கலாச்சாரம்
நியூசிலாந்தின் பூர்வக்குடிகளின் நடனமாக ஹகா இருக்கிறது. அது மாவோரி கலாச்சார நடனமாகும். இது பெரும்பாலும் ஒரு குழுவால் நிகழ்த்தப்படுகிறது. அது மிக சிறப்பான ஒரு கலாச்சார நடனம். ஆனால், அதை வைத்தே நியூசிலாந்தில் சில அடிப்படைவாதிகள் அரசியல் செய்துள்ளனர். இவை இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது நியூசிலாந்து அரசியலிலும் எதிரொலித்துள்ளது.
நியூசிலாந்து அரசியல்வாதிகள் பலரும் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீக்கியர்களுக்கு ஆதரவு தெரிவித்த நியூசிலாந்து அரசியல்வாதிகள், ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய கும்பலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications