"ட்ரூடோ எல்லாம் ஒரு ஆளே இல்லை.." இந்தியா உடனான மோதல்.. என்ன கனடா முக்கிய தலைவரே இப்படி சொல்லிட்டாரு
ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள பிரதான தலைவர் ஒருவரே ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர்.

அவரது மரணத்திற்கு இந்திய ஏஜெண்டுகளின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஆதாரத்தை வெளியிடும்படி வலியுறுத்துகிறது.
மோதல்: ஆனாலும், ஆதாரத்தை வெளியிட மறுக்கும் கனடா தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் இரு தரப்பு உறவுகள் மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே கனடா நாட்டவருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான தூதர்களை வெளியேற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி சுமார் 40க்கும் மேற்பட்ட தூதர்களைக் கனடா வாபஸ் பெற்றது.
இந்தச் சூழலில் கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியேர் போய்லிவ்ரே மோசமடைந்து வரும் இந்தியா கனடா உறவுகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாகச் சாடிய அவர், ட்ரூடோவை இந்தியாவில் அனைவரும் இந்தியாவில் சிரிக்கும் பொருளாகவே பார்க்கிறார்கள் என்றும் இந்தியாவுடன் நல்லுறவை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில்
எதிர்க்கட்சி தலைவர்: கனடாவில் தற்போது வரும் சர்வேக்களில் ட்ரூடோவுக்கு ஆதரவான நிலை இல்லை. அங்கே பெரும்பாலான மக்கள் ட்ரூடோவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் எல்லாம் ட்ரூடோவை காட்டிலும் பியேர் போய்லிவ்ரேவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. பியேர் நேபாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்
இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது குறித்துப் பேசிய அவர், "ட்ரூடோ எந்தளவுக்கு ஒரு மோசமான தலைவராக இருக்கிறார் என்பதற்கு இது மற்றொரு உதாரணம். அவர் உள்நாடுகளிலும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.. வெளிநாடுகளிலும் நாட்டிற்கே சிக்கலைத் தருகிறார். அவர் திறமையே இல்லாத நபர்.. இப்போது இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள ஒவ்வொரு பெரிய நாடுகள் உடனும் கனடாவுக்கு மோதல் போக்கே நிலவி வருகிறது" என்று கூறியுள்ளார்.
காமெடி நபர்: மேலும், ட்ரூடோ நகைப்புக்குரிய மனிதராக மாறிவிட்டதாகவும் இந்தியாவில் யாருமே அவரை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் பியேர் தெரிவித்தார். ட்ரூடோவை கடுமையாகச் சாடிய பொய்லிவ்ரே, பூமியின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவுடன் கனடாவுக்கு நல்லுறவு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "உலகில் மிகப் பெரிய ஜனநாயகமாக இந்தியா இருக்கிறது. இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது ஓகே தான். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தேவை என நினைக்கிறேன்.. நான் இந்த நாட்டின் பிரதமராக இருக்கும்போது அதைத்தான் செய்வேன்" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்: இந்த விவகாரம் முதலில் எழுந்த போது இந்தியாவில் ஆளும் பாஜக எதிர்க்கட்சியான காங்கிரஸ் என இரண்டுமே ஒரே நிலைப்பாட்டை எடுத்து கனடா குற்றச்சாட்டை நிராகரித்தது. ஆனால், கனடாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவரே அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இல்லை. இதுவே கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications