பழைய ஆயுதத்தை தூசு தட்டும் டிரம்ப்.. ஈரான்-க்கு உதவும் நாடுகளுக்கு 'பெரிய' செக்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வாரங்களுக்கு அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல (கட்டணத்துடன்) ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தைகள் போர் முடிவுக்கு வரும் என்பதை உறுதி செய்ய முடியாது என்ற முக்கியமான கருத்தை ஈரான் முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் தனது பழைய ஆயுதத்தை தூசு தட்ட துவங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாட்டின் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து அதை உடனடியாக அமலாக்கம் செய்துள்ளார். இந்த அறிவிப்பு உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

டிரம்ப்-ன் திட்டம் என்ன?
'ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாடு அமெரிக்காவுக்கு விற்கும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 50 சதவீத வரி விதிக்கப்படும். எந்த விதமான விலக்கும் அல்லது சலுகையும் கிடையாது' என்று டிரம்ப் தெளிவாக தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் டிரம்ப் தனது வரி விதிப்பு கொள்கையை மீண்டும் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. ஆனால் டிரம்ப் எந்த நாடு ஈரானுக்கு ஆயுதம் சப்ளை செய்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, இதேபோல் எந்த நாட்டின் மீது வரி விதிக்கப்படுகிறது என்பதையும் அறிவிக்கவில்லை.
யார் சப்ளையர்?
ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா முக்கிய இடத்தை வகிக்கிறது என அட்லான்டிக் கவுன்சில் தரவுகள் கூறுகிறது.
ரஷ்யா நவீன ஆயுதங்களின் முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது, குறிப்பாக விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர்நிலை ராணுவ உபகரணங்களை வழங்கும் நாடாக உள்ளது.
சீனா நேரடியாக பெரிய அளவில் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக, இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்குகிறது. அதாவது, ட்ரோன் உற்பத்தி, ஏவுகணை எரிபொருள் மற்றும் பிற ராணுவ பயன்பாட்டிற்கு மாற்றக்கூடிய தொழில்நுட்ப ஆதரவை வழங்கப்படுகின்றது .
வட கொரியா, குறிப்பாக ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வழங்கும் நாடாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த மூன்று நாடுகளும் வெவ்வேறு துறைகளில் ஆதரவு வழங்கி, ஈரானின் ராணுவ திறனை பலப்படுத்தும் முக்கிய பங்காற்றுகின்றன.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சவால்
இதன் மூலம் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா மற்றும் சீனா முன்னிலையில் உள்ளன. ஆனால், இந்த இரு நாடுகளும் உலகின் பெரிய பொருளாதார வல்லரசுகள் என்பதால், அவர்கள் மீது 50 சதவீத வரி விதிப்பது டிரம்புக்கு எளிதான காரியமல்ல.
இந்த இரு நாடுகளையும் எதிர்கொள்வது டிரம்புக்கு கடினம், இதனால், சிறிய நாடுகளுக்கு மட்டுமே இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வர்த்தகம்
இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ள நிலையில். இது அந்த நாடுகளின் ஏற்றுமதியை பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப் ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் பெரும் ஏமாற்றத்தை கண்டு இருக்கும் வேளையில் மீண்டும் வரி விதிப்பு முறையை கையில் எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications