ஜெலன்ஸ்கியை டிரம்ப் அடிக்காமல் விட்டதே பெருசு! எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த மிக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும் டிரம்புக்கும் ஜெலன்ஸ்கிக்கும் வார்த்தை யுத்தமே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது என்று பார்க்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் டிரம்ப் தீவிரமாக உள்ளார். இத்தகைய சூழலில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்றார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சமரசத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியில் முடிந்துள்ளது.

அதிலும் ஜெலன்ஸ்கியின் முகத்திற்கு நேராகவே டிரம்ப் திட்டினார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவியது. உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்தது நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.
லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்.. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்து உள்ளது. அமெரிக்க ஆயுதங்களை வைத்தே உக்ரைன் சண்டையிட்டது. இது மட்டும் இல்லையென்றால் ஒரே வாரத்தில் போர் முடிந்து இருக்கும்" என்று டிரம்ப் கூறினார். டிரம்ப் பேச்சால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு மற்றும் மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு வெளியேறினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் தொடர்பாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்காமல் விட்டதே பெருசு என்றும், அவர் பொறுமையை கடைபிடித்துள்ளார் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகோரோவா இது தொடர்பாக கூறியதாவது:-
"ஜெலன்ஸ்கியுடனான காரசார விவாதத்தின் போது அவரை டிரம்ப் அடிக்காமல் விட்டு பொறுமையை கடைபிடித்து உள்ளார். ஜெலன்ஸ்கி மிகப்பெரிய பொய்யர். அவர் கூறிய பொய்களில் பெரிய பொய் என்னவென்றால் 2022ல் கீவ் தனியாக இருந்தது என்று வெள்ளை மாளிகையில் சொன்னதுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications