45 நொடிகளில்.. கண்முன் கொடூரம்.. அதிகாலையில் ஓடிய மக்கள்.. துருக்கி நிலநடுக்கத்தில் நடந்தது என்ன?
பனி படர்ந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்க சேதங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அன்காரா: துருக்கி நிலநடுக்கம் தொடர்பாக 300க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ள நிலையில், அங்கே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகாலை துருக்கியில் இன்று காலை 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை துருக்கியில் 300க்கும் அதிகமானோர் பேர் வரை பலியாகி உள்ளனர். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று என்று அமெரிக்கா குறிப்பிட்டு உள்ளது.

எப்போது ஏற்பட்டது
காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. முதல் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட உடனே கடைசியாக 7.8 ரிக்டரில் அடுத்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது.

எங்கே எல்லாம் உணரப்பட்டது
துருக்கி அருகே இருக்கும் சிரியா, எகிப்த், சைப்ரஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. சிரியா எல்லையோர நகரங்கள், துருக்கியில் 10க்கும் மேற்பட்ட நகரங்கள் மொத்தமாக இந்த நிலநடுக்கத்தால் முடங்கி போய் உள்ளது. இங்கே கடுமையான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இஸ்ரேலில் கூட 10 நொடிகள் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்றால் அதன் வீரியத்தை யோசித்து பாருங்கள்.

பலி எண்ணிக்கை - அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் 330 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் சிரியாவில் 280 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 600க்கும் அதிகமாக ஆகி உள்ளது.உண்மையான பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம் என்று அமெரிக்கா புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று என்று அமெரிக்கா குறிப்பிட்டு உள்ளது. அதாவது துருக்கியில் மட்டும் பலி எண்ணிக்கை பல ஆயிரங்களை தொடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சேதங்கள்
துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 1710 கட்டிடங்கள் அங்கு இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்து உள்ளன. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கி உள்ளன. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. துருக்கியில் சேதங்கள் கடுமையாக உள்ளதால் சர்வதேச உதவியை அந்நாட்டு அரசு கோரி உள்ளது. உலக நாடுகள் மீட்பு பணிகளில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications