அமெரிக்கா போட்ட 5,000 குண்டுகள் – எல்லாமே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கவாம்!
வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை வளைத்து வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது இதுவரை 5000க்கும் மேலான குண்டுகளை வீசியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அனைத்தும் விமானத் தாக்குதலாகும்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்கள் இவை. இதில் 3000க்கும் மேற்பட்ட இலக்குகள் தீவிரவாதிகளின் டாங்குகள் என்று பென்டகன் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களில் எதிரிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்கியது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான தாக்குதலையே நடத்தியது. ஆனால் போகப் போக அது வி்ரிவடைந்தது. மேலும் பல நாடுகளும் அமெரிக்காவுடன் கை கோர்த்தன. அனைவரும் சேர்ந்து விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுவரை தீவிரவாதிகளின் 58 டாங்குகள், 184 கவச வாகனங்கள், 303 பிக்கப் லாரிகள், 26 ஆயுத வாகனங்கள், 394 பிற வாகனங்களை அழித்துள்ளதாக பென்டகன் கணக்கு காட்டியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்க ராணுவம் முன்பு பயன்படுத்தி வந்தவையாகும். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் கிளம்பிச் சென்றபோது விட்டு விட்டுப் போனவையாகும்.
இந்தத் தாக்குதலில் எந்தெந்த இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன என்ற விவரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. அதேசமயம், எதிரிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டும் அது கூறியுள்ளது.
மேலும் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் எவ்வளவு வாகனங்கள், ஆயுதங்கள் இருக்கின்றன என்ற விவரத்தைுயம் பென்டகன் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் சேர்ந்து இதுவரை 1676 முறை விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேலும் கூட்டுப் படை போர் விமானங்கள் மொத்தமாக 15,465 முறை பறந்துள்ளனவாம்.












Click it and Unblock the Notifications