நாய்கள் மத்தியில் சைலண்டாக பரவும் கொரோனா! "கிளம்பும் புதுப்புது வேரியண்ட்கள்!" பரபர ஆய்வு முடிவுகள்
கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சியோல்: கடும் பாதிப்பு ஏற்படுத்திய டெல்டா வேரியண்ட்கள் உட்பட பல கொடிய கொரோனா வேரியண்ட்கள் நாய்களுக்கு மத்தியிலும் பரவலாம் என்றும் இதை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் பல வேரிண்ட்கள் உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2020இல் கொரோனா பாதிப்பு முதலில் ஏற்படத் தொடங்கியது.. அடுத்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பாதிப்பு நம்மை ஒரு வழி செய்துவிட்டது என்றே சொல்லலாம். உலகின் அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வேக்சின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு இப்போது குறைந்திருக்கிறது. உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா
இந்தியாவில் கடந்த 9ஆம் தேதி தினசரி பாதிப்பு 379ஆக இருந்த நிலையில், அதன் பிறகு சுமார் 3.5 மாதங்களுக்குப் பிறகு.. 10ஆம் தேதி கொரோனா பாதிப்பு 441ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் 456ஆக உயர்ந்த வைரஸ் பாதிப்பு, நேற்று 524ஆக அதிகரித்தது. இன்று 444 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது குறைவு என்பது போலத் தோன்றினாலும் கூட ஞாயிற்றுக்கிழமை டெஸ்டிங் குறைவு என்பதால் வைரஸ் பாதிப்பு குறைவாகவே பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

நாய்கள்
இதனிடையே கடும் பாதிப்பு ஏற்படுத்திய டெல்டா வேரியண்ட்கள் உட்பட பல கொடிய கொரோனா வேரியண்ட்கள் நாய்களுக்கு மத்தியிலும் பரவும் ஆபத்து உள்ளது. இதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் பல வேரிண்ட்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. இது குறித்து தென் கொரிய ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். அதில் தான் டெல்டா உள்ளிட்ட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வேரியண்ட்கள் நாய்களுக்கு இடையே பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். நாய்கள் மத்தியில் இதுபோன்ற பாதிப்பு கண்டறிவது இதுவே முதல்முறையாகும்.

எப்படிப் பரவும்
பீகிள் இன நாய்களுக்கு டெல்டா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு மூக்கு வழியே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் அவை தனிமைப்படுத்தினர். அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய்கள், பாதிக்காத நாய்களை ஒன்றாக வைத்து ஆய்வு செய்துள்ளனர். ஒரு வாரம் நடத்திய இந்த ஆய்வில் வைரஸ் பாதித்த நாய்கள் மற்றும் வைரஸ் பாதிக்காத நாய்கள் என இரண்டிலும் பெரியளவில் எந்த அறிகுறிகளையும் கண்டறிய முடியவில்லை.

நுரையீரல் புண்கள்
இருப்பினும், 10 நாட்களுக்குப் பிறகு, நாய்களின் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இரு பிரிவு நாய்களின் நுரையீரலிலும் நுண்ணிய புண்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் நாய்களும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் அவை நேரடி தொடர்பு மூலம் மற்ற நாய்களுக்குப் பரவும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது இனி விலங்குகள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பால் புதிய வேரியண்ட்கள் பரவுமோ என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

வேக்சின்
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு மத்தியிலேயே மீண்டும் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், இதுபோன்ற சாத்தியம் அதிகரிக்கிறது.. செல்ல பிராணிகள் மூலம் மீண்டும் புதிய வகை தோன்றுவதைத் தடுக்க அதற்கும் நாம் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்" என்றனர்.. நாய்களின் நாசி மூலம் வைரஸ்கள் பரவக்கூடும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்க செல்லப்பிராணிகளுக்கு வேக்சின் அளிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை
அதேபோல Sars-CoV-2 எனப்படும் Mers-CoV பாதிப்பும் மற்ற உயிரினங்களுக்கும் பரவக்கூடும் என்பதையும் செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபோல விலங்குகள் மத்தியில் மீண்டும் மீண்டும் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தென் கொரிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications