வாயை விட்ட டாப் அதிகாரி.. சத்தமின்றி தூக்கிய சீனா! உண்மையை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஜிங்பிங்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள கொரோனா உள்ள நிலை குறித்து அந்நாட்டின் முக்கிய சுகாதாரத் துறை அதிகாரியே பகீர் விளக்கம் கொடுத்துள்ளார்.
சீனாவுக்கு டிசம்பர் மாதம் மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா தொடக்கம் தவிர பெரும்பாலான காலம் சீனா கொரோனா பாதிப்பை மிகச் சிறப்பாகவே கையாண்டது. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே லக்டவுனில் முடங்கியிருந்த போதும், சீனா இயல்பாகவே இருந்தது.
அந்தளவுக்கு கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு வந்த சீனாவில் இந்த மாதம் நிலைமை தலைகீழ்தான். அங்கு ஜீரோ கோவிட் பாலிசி அமலில் இருந்த நிலையில், அதை விலக்கிக் கொண்டதும் வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் தொட்டது.

சீனா
அதாவது முன்பு சிலருக்கு கொரோனா என்றாலே மினி லாக்டவுன் தனிமைப்படுத்துதல் என எல்லாமே கடுமையாக இருக்கும். ஆனால், இப்போது அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இப்படி வேகமாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். மேலும், அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. உயிரிழப்புகளும் கூட உச்சம் தொட்டுள்ள நிலையில், மயானங்களிலும் கூட நீண்ட வரிசையைப் பார்க்க முடிகிறது.

ஒரே நகரில் தினசரி 5 லட்சம் பாதிப்பு
ஒரே அடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியது சீனாவில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. அதேபோல உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டும் கொரோனா உயிரிழப்பு என்றால் என்ன என்ற விளக்கத்தையும் மாற்றியுள்ளனர். இதற்கிடையே சீனாவில் உள்ள மோசமான நிலை குறித்து அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரியே முக்கிய கருத்தைத் தெரிவித்திருந்தார். சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிங்டாவோவில் தினசரி பாதிப்பு 5 லட்சத்தை எட்டியுள்ளதாக அந்நகரின் நகராட்சி சுகாதார தலைவர் தெரிவித்தார்.

கஷ்டம் தான்
அதாவது அந்த ஒரு நகரில் மட்டும் தினசரி 5 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு கோடி பேர் வசிக்கும் கடலோர நகரமான கிங்டாவோவில் சில நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்து உச்சம் தொடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தினசரி 10% வரை வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் நகராட்சி சுகாதார தலைவர் தெரிவித்திருந்தார். சீனா தனது நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் தான் இருந்து வருகிறது என்றும் வைரஸ் பாதிப்பு மோசமாக இல்லை என்றும் சர்வதேச அரங்கில் இமேஜை பின்பற்றி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக அரசு பொறுப்பில் உள்ளவரே எச்சரித்திருந்தார்.

சத்தமின்றி தூக்கிய சீனா
இதை அந்த நகரில் வெளிவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி நிறுவனமே வெளியிட்டது. இதையடுத்து பல சர்வதேச ஊடகங்களும் பகிர்ந்தன. சீனாவில் கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என்று பல சர்வதேச வல்லுநர்களும் கூறினர். அதாவது ஒரு நகரிலேயே தினசரி 5 லட்சம் பேருக்குப் பாதிப்பு என்றால் ஒட்டுமொத்த நாட்டில் வைரஸ் பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர். இந்தச் சூழலில், ஆன்லைனில் இருந்த அவரது பேட்டியில் கொரோனா குறித்து அவர் பேசியதை மட்டுமே சீனா நீக்கியுள்ளது.

ரொம்பவே மோசம்
அங்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் அரசால் கட்டுப்படுத்தப்படுபவை. அவை அங்கு கொரோனா பரவல் அதிகம் இல்லை என்றே தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், சிலர் உண்மையான பாதிப்புகளை இதுபோல வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். அங்குள்ள கிழக்கு ஜியாங்சி மாகாணத்தில் வசிக்கும் மக்கள்தொகையில் சுமார் 80%, அதாவது 3.6 கோடி பேர் வரும் மார்ச் மாதத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை
சீனாவில் கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு அதிகரிப்பது உலகெங்கும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இதனால் இந்தியாவிலும் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கட்டாயம் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல வரும் டிச.27இல் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications