துண்டிக்கப்படும் உலக பொருளாதாரத்தின் உயிர்நாடி? அமெரிக்காவால் இந்தியாவுக்கு அதிக ஆபத்து! அது எப்படி
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்கியுள்ள சூழலில், இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதில் தெளிவு இல்லாத ஒரு சூழலே இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு நீடித்தால் ஈரானைத் தாண்டியும் கூட இதனால் பல நாடுகள் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடு எது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
உலக வரைபடத்தில் ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஒரு சிறிய கீறல் போலத் தெரிந்தாலும், அதுதான் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடி. அந்த உயிர்நாடியைத் தான் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், கடல்வழி முற்றுகையும் நெரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த முடக்கத்தால் முதன்மையாகப் பாதிக்கப்படும் நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

ஈரான்
இந்த முற்றுகையினால் அதிகம் பாதிக்கப்படுவது ஈரான்தான். ஈரானின் மொத்த வருமானத்தில் கச்சா எண்ணெய் மற்றும் மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் ஏற்றுமதிதான் அதிகம். அமெரிக்காவின் தடையால் ஒரு சொட்டு எண்ணெய்யைக் கூட வெளியே கொண்டு செல்ல முடியாமல் ஈரான் தவிக்கிறது. சபாஹர் மற்றும் பண்டார் அப்பாஸ் போன்ற முக்கியத் துறைமுகங்களில் கப்பல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 'ரிச் ஸ்டாரி' போன்ற கப்பல்கள் திருப்பி அனுப்பப்படுவது ஈரானின் வர்த்தகத்தைச் சிதைத்துள்ளது. ஏற்றுமதி முடங்கினால் அந்நியச் செலாவணி குறையும், அது ஈரான் நாணயத்தின் மதிப்பை அதலபாதாளத்திற்குத் தள்ளும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போலாகும்.
சீனா
உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு சீனா. அவர்களுக்கு இது ஒரு பெரிய தலைவலி. ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி வந்த சீனாவுக்கு, இப்போது அந்த வழி அடைபட்டுள்ளது. இதனால் மாற்று வழிகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயம். ஈரானில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் மற்றும் அங்கிருந்து வரும் சீனக் கப்பல்கள் அமெரிக்காவால் தடுத்து நிறுத்தப்படுவது, அமெரிக்கா - சீனா இடையிலான ராஜதந்திரப் போரை இன்னும் மோசமாக்கும்
இந்தியா
அதேபோல இதனால் இந்தியாவும் கூட மோசமாகவே பாதிக்கப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதியைத் தான் நம்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் குறைந்தாலே, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் எகிறும். அதன் நேரடிப் பாதிப்பு நம் ஊர் பெட்ரோல் பங்குகளில் தெரியும்.
எரிபொருள் விலை உயர்ந்தால் அனைத்து வாகனங்களின் வாடகையும் கூடும்.. அதன் விளைவாகக் காய் கறி முதல் மளிகை பொருட்கள் வரை அத்தனையுமே விலை ஏறும். இந்தப் பகுதியில் 'வார் ரிஸ்க்' பிரீமியம் அதிகரித்துள்ளதால், கப்பல் போக்குவரத்துச் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இது இந்திய இறக்குமதியாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும்.
ஜப்பான் மற்றும் கொரியா
ஆசியாவின் மற்ற முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா தங்களின் கச்சா எண்ணெய் தேவையில் 70%-க்கும் மேல் இந்த ஜலசந்தியைத் தான் நம்பியுள்ளன. ஒரு வாரம் இந்த வழி அடைக்கப்பட்டால் கூட, இந்த நாடுகளில் மின்சாரம் மற்றும் தொழில் உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளாகும். இரு நாடுகளிடமும் பல வாரங்களுக்குத் தேவையான கையிருப்பு இருந்தாலும் கூட கச்சா எண்ணெய் வரத்துக் குறைவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது வெறும் கடல் வழி அல்ல.. அது உலக நாடுகளின் ஒரு நரம்பு மண்டலம். அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த யுத்தத்தில், சம்பந்தமே இல்லாத சாமானிய மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதுதான் கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications