ஈரானின் எந்த அணு ஆயுத தளங்கள் தாக்கப்பட்டன? இவற்றை மட்டும் இஸ்ரேல் டார்கெட் செய்தது ஏன்?
டெல் அவிவ்: இன்று அதிகாலை ஈரானின் அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறி வைத்து இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் தாக்கப்பட்ட இடங்கள் என்ன? ஏன் இஸ்ரேல் இந்த இடங்களை குறி வைத்தது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தாக்குதலை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டு மக்களிடையே பேசியதாவது, “ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு தளத்தில் நாங்க தாக்குதல் நடத்தினோம். முக்கியமான ஆயுத தயாரிப்பு மையமான நடான்ஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரானிய விஞ்ஞானிகளை குறிவைத்தோம். மேலும், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு தளத்தையும் தாக்கினோம்.

ஈரானின் ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இது பல உயிர்களுக்கு ஆபத்தானது. ஆகவே அதை தடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு, இஸ்ரேல் மீது ஈரான் 300 ஏவுகணைகளை ஏவியது. ஒவ்வொரு ஏவுகணையிலும் ஒரு டன் வெடிமருந்து இருந்தது. இது நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்தது. விரைவில், அந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமக்கும். இது மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஈரான் மூன்று வருடங்களில் 10,000 ஏவுகணைகளை தயாரிக்க இருக்கிறது. நியூ ஜெர்சி சைஸ் கொண்ட நமது நாட்டில் 10,000 டன் வெடிமருந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இது ஒரு பெரிய ஆபத்து. இதை நாம் தடுக்க வேண்டும்.
இஸ்ரேலை அழிக்க ஈரான் புதிய திட்டம் தீட்டியுள்ளது. தனது கூட்டாளிகளை வைத்து இஸ்ரேலைச் சுற்றி வளைத்து நேரடித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 7 தாக்குதல் இதற்கு ஒரு உதாரணம். ஆனால், நம் வீரர்கள் சிங்கங்களைப் போல எழுந்து நம் நாட்டைப் பாதுகாத்தனர். ஹமாஸை அவர்கள் வீழ்த்தினார்கள். ஹிஸ்புல்லாவை அழித்தோம். சிரியா மற்றும் ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு படைகளைத் தாக்கினோம்.
ஈரான் கடந்த வருடம் இரண்டு முறை நம்மை நேருக்கு நேர் தாக்கியபோது, நாமும் திருப்பித் தாக்கினோம். நம்மை பாதுகாப்பதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இதனை ஈரான் நாட்டு செய்தி ஊடகங்களும் உறுதி செய்திருக்கின்றன. இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள 'நடான்ஸ்' யுரேனியம் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக வெடிச்சத்தம் கேட்டதாகவும், அங்கிருந்து கரும்புகை வந்ததாகவும் ஈரான் ஊடகம் தெரிவித்தது.
நடான்ஸ் அணு ஆயுதத் தயாரிப்பு மையம் ஏன் குறிவைக்கப்பட்டது?
ஈரானின் மிக முக்கியமான மற்றும் அனைவரும் அறிந்த அணு ஆயுதத் தயாரிப்பு மையங்களில் 'நடான்ஸ்' ஒன்று. இது நாட்டின் யுரேனியம் சுத்திகரிப்பு திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நடான்ஸில், யுரேனியத்தை சுத்திகரிக்க ஆயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது அணுமின் நிலையங்களுக்கு எரிபொருளையும், அணு ஆயுதங்களுக்குத் தேவையான பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரானின் அணுசக்தி இலக்குகள் பற்றி உலகம் முழுவதும் கவலைகள் இருக்கின்றன. எனவே நடான்ஸ் தாக்குதல்களின் மையமாக இருந்து வருகிறது. மேலும், இஸ்ரேல் நடத்திய பல சைபர் தாக்குதல்களையும் நடான்ஸ் சந்தித்துள்ளது. இதன் முக்கியத்துவம் தொழில்நுட்பத் திறனை மட்டும் கொண்டதல்ல, ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தூணாகவும் இது கருதப்படுகிறது.
ஈரானில் உள்ள அணு உலைகள்
அணு மின் நிலையம்
புஷேர்
ஆராய்ச்சி உலைகள்
தெஹ்ரான்
இஸ்ஃபஹான்
அராக்
கட்டுமானத்தில் உள்ள ஆலை
சிரிக்
டார்கோவின்
யுரேனியம் சுரங்கம்
சாக்ஹண்ட்
அணுசக்தி தளங்கள்
ஃபோர்டோவ்
நடான்ஸ்
தெஹ்ரான்
பிற அணுசக்தி தளங்கள்
அனராக்
அர்தகன்
கராஜ்
தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபோர்டோ சுத்திகரிப்பு தளம், ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மற்றொரு முக்கியமான பகுதியாகும். இப்படி அனைத்து அணுசக்தி மையங்களும் தாக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications