"எல்லா பெண்களும் 8 குழந்தைகள் பெத்துக்கணும்.." வினோத காரணம் சொன்ன அதிபர் புதின்.. ஓ இதுதான் மேட்டரா
மாஸ்கோ: உக்ரைன் போர், பொருளாதாரத் தடைகள் என்று ரஷ்யா இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பேச்சு இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரஷ்ய தலைநகர் உலக ரஷ்ய மக்கள் கவுன்சிலின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் புதின் கலந்து கொண்டார். அதில் புதின் ரஷ்யாவின் குடும்பங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

அதாவது. அப்போது பேசிய புதின், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெரிய குடும்பங்களே பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் காலத்தில் ரஷ்யாவின் மக்கள்தொகையை அதிகரிப்பதே தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள்தொகை: உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே ரஷ்யாவும் இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்சினையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அங்கே குழந்தை பிறப்பு விகிதம் என்பது கடந்த 1990கள் முதலே சரிந்து வருகிறது. இந்தச் சூழலில் இடையே இந்த உக்ரைன் போரும் வந்த நிலையில், அதில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி ரஷ்ய மக்கள்தொகை கடுமையாகச் சரிந்து வரும் நிலையில், அதிபர் புதின் இப்படிப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாரம்பரியமாக நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தில் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேல்தான் குழந்தைகள் இருக்கும். அதுதான் பல தலைமுறைகளாக நமது பாரம்பரியமாக இருந்தது. அதிலும் நமது பாட்டிகள் ஏழு, எட்டு குழந்தைகளைப் பெற்றனர். இது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.. இந்த சிறந்த பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
புத்துயிர் தரணும்: அதற்கு நாம் புத்துயிர் தர வேண்டும். பெரிய குடும்பங்கள் தான் ரஷ்யா மக்களின் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும், குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அதற்கு ஒரு ஆன்மீக தொடர்பு இருக்கிறது. அதுதான் ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள்தொகையைப் பாதுகாப்பதும், அதிகரிப்பதும் தான் அடுத்து வரும் காலத்தில் எங்கள் இலக்காகும். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ரஷ்யாவின் எதிர்காலம் இதில் தான் அடங்கி இருக்கிறது" என்றார்.
இந்த மாநாட்டை ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பேட்ரியார்க் கிரில் ஏற்பாடு செய்தார். இதில் ரஷ்யாவின் பல பாரம்பரிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நேரடியா குறிப்பிடவில்லை என்ற போதிலும், அதன் காரணமாகவும் கணிசமான உயிரிழப்பை ரஷ்யா எதிர்கொண்டுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
உக்ரைன் போர்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 1.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. மேலும், பல லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரிய போராக இதுவே பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவைப் பொறுத்தவரைப் பல ஆண்டுகளாக அவர்கள் மக்கள் தொகை சரிவால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். ஒரு பக்கம் மேற்குலக நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் இருக்கும் அதேநேரம், மக்கள் தொகை சரிவால் தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இது அந்நாட்டின் பொருளாதார மந்தநிலையை மோசமாக்குகிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான கணக்கெடுப்பின்படி ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியாக இருந்தது. அது 1999இல் புதின் முதல்முறையாக அதிபர் பதவியை ஏற்கும் முன்பு இருந்த மக்கள்தொகையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications