அதானி ஒப்பந்தம் ரத்தாகுமா? இலங்கை அதிபர் கம்யூனிஸ்ட்டா? என்ன நடக்கும்?
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள அனுர குமார திசாநாயக்க முதன்முறையாக இன்று மக்களுக்காக தனது உரையை இரவு 7:30 மணிக்கு நிகழ்த்த இருக்கிறார்.
உலக நாடுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கை அதிபராக ஏகேடி பதவியேற்றிருக்கிறார். இருதுருவ அரசியல் களத்திற்கு மட்டுமே பழகிப் போன இலங்கை மக்கள் இந்த முறை அனுர குமார திசாநாயக்கவை அதிபராக தேர்வு செய்து பெரிய மாற்றத்திற்கு விதைப் போட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று அதிகாரத்திற்கு வந்துள்ளது. அதுவும் வலதுசாரி கருத்தாக்கம் கொண்ட இந்திய ஆட்சியாளருக்கு எதிர் துருவத்தில் உள்ள ஒரு கொள்கை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 3% வாக்குதான் பெற்றார். இந்த முறை அப்படியே நிலைமை தலைகீழாகி உள்ளது. இறுதிக்கட்ட வரை வாக்கு எண்ணிக்கையின் போது அனுர வெற்றி பெறுவாரா என்ற பதற்றம் நிலவியது. ஊகங்களை உடைத்து வெற்றிக் கொடியை நாட்டியுள்ள அனுர குமார திசாநாயக்க அதிபராகப் பதவியேற்றவுடன் இன்று இலங்கை மக்களுக்காக முதன்முறையாக தனது உரையை இரவு 7:30க்கு நிகழ்த்த இருக்கிறார்.
55 வயதில் இவர் இலங்கையின் அதிபராகப் பதவியேற்றுள்ளது ஒரு அதிசயம்தான். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது? அதற்குக் காரணம் என்ன? இவர் கம்யூனிஸ்ட் கொள்கை ஆதரவு நிலைப்பாட்டால் இந்தியாவை எதிர்ப்பாரா? சீனாவுக்கு நேசக்கரம் நீட்டுவாரா? எனப் பல கேள்விகளுக்கு பிபிசியின் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் திருமலை விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "ஏகேடி ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 1980களுக்குப் பின்னர் இவர் ஜெவிபியில் ஒரு மாணவர் செயல்பாட்டாளராகச் சேர்ந்தார். 1987இல் இந்தியா இலங்கையில் அமைதியைக் கொண்டுவருவதற்காக ஒரு ஒப்பந்தத்தைப் போட்டது. அதை எதிர்த்து ஜெவிபி மிகக்கடுமையானப் போராட்டத்தைக் கையில் எடுத்தது. அதில் சேர்ந்து இயங்கினார் அனுர குமார திசாநாயக்க. இவர் கடந்த 2014இல் தான் ஜெவிபியின் தலைவராக ஆனார். அடிப்படையில் இவர் ஒரு சிங்களர். இதற்கு முன்பாக சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகக் குறுகிய காலம் பதவி வகித்திருக்கிறார்.
கடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையேதான் இருந்தது. அப்போது ஏகேடி பேசுபொருளாகவே இல்லை. எனவே 3ஆவது இடத்தைப் பிடித்தார். கடந்த 2022இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறிப்பாகத் தென் இலங்கை மக்களைப் பிரதான கட்சிகளின் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்தது. அதனால் ஜெவிபிக்கு ஒரு வாய்ப்பை தரலாம் என மக்கள் நினைத்துள்ளனர். ஆகவே அனுர வெற்றிபெற்றுள்ளார்.
இடதுசாரி கொள்கையுடன் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அதாவது ஜெவிபி அதிகார பரவலாக்கத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. 80களுக்குப் பின்னால் சிங்கள, பவுத்த தேசியவாத கட்சியாக உருவெடுத்தது. இது ஒரு விநோதமான மாற்றம். இந்தத் தேர்தலின்போது 13 சட்டத் திருத்தத்திற்கு எதிரான கருத்தைத்தான் பேசி வந்தார். பிறகு தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்த பிறகு 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் பழைய சட்டத்திருத்தத்தை அவர் ரத்து செய்ய முடியாது.

ஒருவேளை அதற்காக முயற்சியில் அனுர ஈடுபட்டால், இந்தியாவுடனான உறவை அது பாதிக்கும். கூடவே மீண்டும் இலங்கைக்குள் ஒரு கலவர நிலை உருவாகும். ஜெவிபி ஆட்சிக்கு வந்துவிட்டதால் அது சீனா உடனான உறவை அதிகம் விரும்பக் கூடும் என ஊகங்கள் எழுகின்றன. இந்தக் கட்சியின் தொடக்கக் காலம் தான் மார்க்சிய லெனினிய கொள்கையில் ஊறிப்போய் இருந்தது. இப்போது அது சிங்கள பவுத்த தேசியவாத கட்சிதான். இதை இன்று மார்க்சிய கட்சி என சொல்வது நகைப்புக்குரியது. எனவே சொந்த நாட்டு நலன் என்பதைக் கொண்டுதான் முடிவுகளை எடுப்பார்கள். கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுப்பது இருக்காது.
அதானி உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வோம் என அனுர தேர்தல் பரப்புரையின் ஒரு கருத்தை முன்வைத்தார். வங்கதேசத்தில் கூட புதிய அரசு அமைந்ததும் அதானி ஒப்பந்தம் விலக்கப்படும் என்றது. இது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது கேள்விக்குறி. இந்தியாவை அனுர பகைத்துக் கொள்ள முடியாது. மிகப்பெரிய அண்டை நாடு இந்தியா. மேலும் இலங்கையில் மின்சார தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. 2022இல் மிகப்பெரிய மின்வெட்டில் மக்கள் சிக்கித் தவித்தனர். நாள் ஒன்றுக்கு 15 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. எனவே அதானியின் மின் உற்பத்தி இலங்கைக்கு அவசர தேவையாகவே உள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications