‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப், இம்ரான் கான் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக். இவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டினார்.
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளால் 2019ல் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. யாசின் மாலிக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என என்ஐஏ சார்பில் வாதாடப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியதை பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகளை அழைத்து பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்தும் யாசின் மாலிக்கை விடுவிக்க வேண்டும். அவரது வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். சிறையில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், "பொதுவான குற்றச்சாட்டுகளின் கீழ் யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் காஷ்மீரி மக்களுக்கு எதிரான துன்புறுத்தலாம். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு மூலம் ஜம்மு காஷ்மீர் மக்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும்'' என தெரிவித்துள்ளது. இதுபற்றி யாசிக் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக், ‛‛இந்த தண்டனை சட்டவிரோதமானது. இது நீதிமன்றத்தில் சில நிமிடங்களில் வழங்கிய தீர்ப்பு. யாசின் மாலிக் ஒருபோதும் சரணடைய மாட்டார்'' என்றார்.

பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய ஜனநாயகம், அதன் நீதி அமைப்புக்கு இன்று கருப்பு நாள். யாசின் மாலிக்கை உடல்ரீதியாக இந்தியா சிறையில் அடைக்க முடியும். ஆனால் அவர் அடையாளப்படுத்தும் சுதந்திரத்தின் கருத்தை ஒருபோதும் சிறைப்படுத்த முடியாது. ஆயுள் தண்டனை "காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு புதிய உத்வேகத்தை வழங்கும்'' என கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர்
வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ‛‛டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது போலி விசாரயைின் மூலம் வழங்கப்பட்ட அநியாயமான தண்டனை'' என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி," யாசின் மாலிக் ஒரு ஹீரோ. சிறை மற்றும் சித்திரவதையால் யாசின் மாலிக்கின் மனஉறுதியை உடைக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப், இம்ரான்கான்
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ ஜேகேஎல்எப் தலைவருக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை துயரமானது. இதுபோன்ற செயல்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது. இந்த விஷயத்தில் அனைத்து சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்தில் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான், ‛‛காஷ்மீர் தலைவர் யாசின் மாலிக்கிற்கு எதிராக மோடி அரசின் தொடர்ச்சியான பாசிச தந்திரங்களை கண்டிக்கிறேன். போலியான குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும்'' என்றார்.

பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், "யாசின் மாலிக்கிற்கு பொய்யான குற்றச்சாட்டின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சுயநிர்ணய தேடலில் பாகிஸ்தான் எப்போதும் உடன் இருக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications