தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சியாம்.. பிரதமர் மோடி எப்படி சிரிக்காமல் சொல்கிறார்.. ஸ்டாலின் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தாய் தமிழை காத்து தமிழர் என்ற உணர்வோடு நம்மை நடமாட வைத்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம். மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். அண்ணாவை தந்த காஞ்சி மண்ணுக்கு வந்துள்ளேன்.

பெரியாரை போன்ற குருவும், கலைஞரை போன்ற சிஷ்யனும் கிடைத்தவர் அண்ணா மட்டும்தான். என்னுடைய அரசியல் பயணத்திற்கு உந்து சக்தியாக இருந்தது காஞ்சி நகரம் தான். 1971ல் எனது கையில் அண்ணா சுடர் ஏற்றி ஓடிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை. மொழிப்போர் தியாகிகளின் பெயரை சொன்னாலே உணர்ச்சி பொங்குகிறது. உடல் நடுங்குகிறது. தாய் நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் வைத்தவர் அண்ணா.
தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது இந்தியை திணிக்கதான். இந்தியை திணிக்க ஒரு கும்பல் துடியாய் துடிக்கிறது. தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழி குறித்து பாடம் எடுத்துள்ளார். அது ஒரு எல்கேஜி மாணவன் பேராசிரியருக்கு பாடம் எடுப்பது போல் இருக்கிறது. பணத்தையும் பதவியையும் காட்டி மிரட்டினாலும் நாங்கள் பணிய மாட்டோம்.
நீங்கள் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தோம். இந்தி திணிப்பு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல.. அது ஒரு பண்பாட்டு படையெடுப்பு.. அந்த இந்தி திணிப்புக்கு எதிராக நாம் போராடி கொண்டிருக்கிறோம். நாட்டில் இந்தி திணிப்பால் பல மொழிகள் அழிந்துள்ளன.
எத்தனை பேரை அழைத்து வந்தாலும் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது. வடமாநில மக்களை ஏமாற்றும் பாஜகவின் டப்பா தமிழ்நாட்டில் வேலை செய்யாது. டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது. வழக்கமான பல வடைகளைத் தான் மீண்டும் பிரதமர் மோடி சுட்டுவிட்டு போயிருக்கிறார். பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காது புளித்துவிட்டது.
பிரதமரின் வருகைக்கு முன் கல்வி நிதி, மதுரை எய்ம்ஸ், கோவை மற்றும் மதுரை மெட்டோ, ஒசூர் விமான நிலையம் அனுமதி உள்ளிட்டவை குறித்து கேள்வி கேட்டேன். ஆனால் ஒரு கேள்விக்கு கூட பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. எத்தனை முறை பிரச்சாரம் செய்த போதும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை ஃபெயிலியர் கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது. அதிமுக ஆட்சி என்று அவர்கள் சொல்லவில்லை. என்டிஏ ஆட்சி என்றே சொல்கின்றனர். தமிழ்நாட்டிற்கு மோடி வந்ததும் சூரியன் மறைந்துவிட்டதாம். இதனை சொல்வது யார் 10 தோல்வி பழனிசாமி.
வாழ்க்கை முழுக்க தரையையே பார்த்திருந்தால், உங்களுக்கு எப்படி சூரியன் தெரியும்? கொஞ்சம் தலைநிமிர்ந்து பாருங்கள்.. அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகம் என்று அமித்ஷா பேசியது நினைவில் இருக்கிறதா? ஜெயலலிதா ஆட்சி ஊழல் ஆட்சி என்று ஊர் ஊராக பிரச்சாரம் செய்ததை மறந்துவிட்டாரா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் தான் பேச வேண்டும்.
நாங்கள் பணிய மாட்டோம்; துணிந்து ஒரு கை பார்ப்போம். 2026 தேர்தலும் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம்தான். மணிப்பூர் போல் தமிழ்நாடு கலவர பூமியாக மாறுவதை தடுக்க மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். இன்றில் இருந்தே கழக உடன்பிறப்புகள் பிரச்சாரத்தை தொடங்குங்கள்.. தீ பரவட்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications