தாமதமாக வந்ததால்.. மூடப்பட்ட கதவுகள்.. உடைத்துக் கொண்டு புகுந்த தேர்வர்கள்..காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரத்தில் தேர்வர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக அரசுத்துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, 2,2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கன அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

மொத்தம் 761 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காலை மற்றும் பிற்பகல் என இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு துவங்கிய தேர்வு மதியம் முடிந்தது. பிறகு பிற்பகல் துவங்கும் தேர்வுக்கு அரை மணி நேரத்தில் வர வேண்டும் என்று தேர்வு மைய அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால், அப்பகுதியில் உணவகம் எதுவும் இல்லாததால் வெகுதொலைவிற்கு சென்று அதாவது காஞ்சிபுரம் சென்று அங்கு சாப்பிட்டு விட்டு தேர்வர்கள் வந்துள்ளனர்.
ஆனால், தேர்வு மையத்திற்கு அரை மணிநேரம் தாமதாக வந்துள்ளனர். அதாவது பிற்பகல் 1 மணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், 1.30 மணியளவில் தேர்வர்கள் சிலர் வந்ததாக தெரிகிறது. இதனால், தேர்வு நடைபெற்ற கல்லூரியின் கதவு மூடப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள், கதவை திறக்க வேண்டும் என்றும் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினரும் குறைந்த அளவிலே இருந்ததால் அந்த வெளியில் இருந்த கதவை பிடித்து ஆவேசமாக தள்ளினர். ஒரு கட்டத்தில் கேட்டும் உடைந்து விட்டது. தொடரந்து உள்ளே சென்ற தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைந்து தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த போலீசார், கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த தேர்வர்களை தனியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications