காஞ்சிபுரம் மேயர் பதவி தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. திடீர் ‘டூர்’ போன 22 கவுன்சிலர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்த கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. 32 வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். விசிக, காங்கிரஸில் தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், வெற்றி பெற்றிருந்தனர்.
மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுரு இருந்து வருகிறார். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
மேயர் மகாலட்சுமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கை இல்லா தீர்மான மனு அளித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் வரும் 29 ஆம் தேதி (நாளை) நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.
மேயருக்கு எதிராக, 10 திமுக கவுன்சிலர்கள் தங்களது நிலைக் குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேயரை மாற்றக் கோரி திமுக மாவட்ட செயலாளர் சுந்தரிடம் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் அமைச்சரான கே.என்.நேரு முன்னிலையிலும் சமாதான பேச்சு நடைபெற்ற போதும் எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்த நிலையில் தான் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழலில், திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில், இவர்கள் கலந்து கொள்வார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது ஓட்டளிக்க வேண்டும் என்றால், 5ல் ஒரு பங்கு, அதாவது கட்டாயம் 41 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கு குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்றால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும்.
கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் நாளை கூட்டத்துக்கு வராவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து, மேயர் மகாலட்சுமி யுவராஜின் பதவி தப்பும். போதிய கோரம் இல்லாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்படும், மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications