பணியின்போது மின்சாரம் பாய்ந்தது- மின்கம்பத்திலேயே உயிரிந்த வயர்மேன் மோகன்ராஜ்-வாலாஜாபாத்தில் பரிதாபம்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில், மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்ழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். 46 வயதான மோகன்ராஜிற்கு, காஞ்சனா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது சாலை விரிவாக்க பணிக்கு சென்ற ஆர்ஆர் இன்ஃபிரா சொலுஷன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் சாய்ந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், மின்வாரிய அலுவலகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, வயர்மேன் மோகன்ராஜ், மதுபானம் கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி, வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றியுள்ளார். பின்னர், அவளூர் மார்க்கமாக செல்லும் லைனை இயக்க முயன்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், மின் கம்பத்தின் உச்சியிலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைகண்டு அதிர்ச்சியுற்ற சக மின் ஊழியர்கள், உடனடியாக வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மின் கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர்.

பின்னர் வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நள்ளிரவு பணியின் போது மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications