என்னாது எம்ஜிஆரா? விஜய்யும் தனது சொத்தை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
செங்கல்பட்டு: கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர் தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைத்தாரே, அது போல் விஜய்யும் எழுதி வைப்பாரா என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் 55 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், விஜய்யை எம்ஜிஆர் என அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள். தான் எம்ஜிஆர் போல் நல்லாட்சியை தருவேன் என விஜய் தெரிவித்திருந்தார். எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்தக் கரங்களுக்கு சொந்தக்காரர்.
விஜய் சொத்து
அவர் தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைத்தார். அது போல் விஜய்யும் சொத்துகளை ஏழை எளியவர்களுக்கு எழுதி வைப்பாரா? அதிமுகவை யாரும் அழிக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தால் அவர்கள்தான் அழிந்து போவார்கள்.
6 மாதங்களில் விலைவாசி எகிறிடுச்சி
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜோசப் விஜய் முதல்வரான 6 மாதங்களில் விலைவாசி உயர்வு மக்கள வாட்டுகிறது. அரிசி கிலோவுக்கு 20 ஏறி விட்டது. சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ 25 ஏறிவிட்டது. பருப்பின் விலை 60 சதவீதம் வரை ஏறியிருக்கிறது. புளி, எண்ணெய் என ஒட்டுமொத்தமாக மளிகை பொருட்கள் எல்லாம் 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பால் விலையும் ஏறி போச்சு!
அரிசி விலை உயர்ந்து போச்சு
அரிசி விலை உயரவே இல்லை என்கிறார் உணவுத் துறை அமைச்சர். மக்கள் குறித்து கவலை இருந்தால்தானே விலைவாசி உயர்வு குறித்து அவர்களுக்கு கவலை இருக்கும்? தற்போது தீபாவளி பண்டிகை வருகிறது. ஆவினில் தரமான இனிப்புகளை வாங்கலாம் என நினைத்திருந்தோம். அதுவும் விலை உயர்ந்துவிட்டது.
விண்ணை முட்டுது விலைவாசி
இந்த ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என்பதை சிந்தித்து பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஏழை எளிய மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் ஆட்சி நடத்தினோம்.
விஜய் என்ன சாதனை செய்தாரு, படத்தில் நடித்தாரு, கோடி கோடியாக சம்பளம் வாங்கினாரு, எம்ஜிஆர் போல் இவர் என்ன சொத்தை எழுதியா வைக்க போகிறார்?
ஊழலோ ஊழல்
நாட்டு மக்களுக்கும் அதிமுகவுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்! அப்படியா தவெக தலைவர்கள் இருக்கிறார்கள், 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றார்களா இல்லையா? ஊழலே இங்குதானே பிறந்தது. ரூ 100 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு யார் வாங்குகிறார்கள், ஏழை எளிய மக்கள்தானே! அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அவர்களது வீட்டிலே அடுப்பெரியும். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து சுரண்டி பிழைத்தவர்தான் இன்று முதல்வராக இருக்கும் விஜய்!
லஞ்சம் பெருத்து போயிருக்கு
இந்த ஆட்சியில் ஊழலே இல்லையாம். திமுக ஆட்சியில் லஞ்சமாக 5000 கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது தவெக ஆட்சியில் ரூ 10 ஆயிரம் கேட்கிறார்கள். எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்குதா?
ரூ 200 கோடி
நான் மக்களோடு மக்களாக இருந்து அவர்களது கஷ்டங்களை பார்த்துவிட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் விஜய் ஒரு படத்திற்கு ரூ 200 கோடி வாங்கிக் கொண்டிருந்தாராம். அந்த 200 கோடியை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டாராம். அப்படியென்றால் சினிமாவை விட அரசியலில் நிறைய சம்பாதிக்கலாம் என எதிர்பார்த்துதானே வந்திருக்கிறார்?
மீதி 800 கோடி எங்கே?
ஒரு படத்திற்கு ரூ 200 கோடி என்றால் இதுவரை 70 படங்களுக்கு ரூ 14 ஆயிரம் கோடி ஊதியமாக வாங்கியிருக்கிறார். ஆனால் தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ 600 கோடி இருப்பதாக மட்டுமே கணக்கு காட்டியுள்ளார். மற்ற பணம் எல்லாம் எங்கே போனது. அவர் ரூ 200 கோடி சம்பளம் வாங்கினாருனு நான் சொல்லவில்லை, அவரது கட்சி தலைவர்கள்தான் சொல்லிக் கொள்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.





Click it and Unblock the Notifications
