பாலியல் இச்சைக்கு மறுத்ததால்.. 5 வயது சிறுவனை அடித்தே கொன்ற அரசு அதிகாரி.. காஞ்சிபுரத்தில் கொடூரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது முரண்டு பிடித்ததால் 5 வயது சிறுவனை அரசு அதிகாரி ஒருவர் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த அரசு ஊழியரை கைது செய்தனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரச்னை ஓய்வதற்குள்ளேயே காஞ்சிபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது மறுத்த 5 வயது சிறுவனை அரசு அதிகாரி அடித்தே கொன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 5 வயது மகன் மற்றும் மகளுடன் அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். அந்த மூதாட்டி தள்ளுவண்டி உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த தள்ளுவண்டி கடைக்கு அரசு அதிகாரியான சர்வேயர் ராஜேஷ் என்பவர் அடிக்கடி வந்து சாப்பிடுவது வழக்கம். நாளடைவில் ராஜேஷ் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறியுள்ளார். கடைக்கு சாப்பிடுவதற்கு வரும்போதெல்லாம் 5 வயது சிறுவனையும், சிறுமியையும் ராஜேஷ் அடிக்கடி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் எப்போதும்போல சிறுவனையும், சிறுமியையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த சிறுமி மற்றும் சிறுவன் இருவரிடமும் சர்வேயர் ராஜேஷ் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த 5 வயது சிறுவன் முரண்டு பிடித்ததால் ராஜேஷ் சிறுவனை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவன் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது, சர்வேயர் ராஜேஷ் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது 5 வயது சிறுவன் முரண்டு பிடித்ததால் ராஜேஷ் பலமாகத் தாக்கியதாகவும், அதில் சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீஸார் சிறுவனின் உயிரிழப்பை கொலை வழக்காகப் பதிவு செய்து சர்வேயர் ராஜேஷை கைது செய்துள்ளனர். பாலியல் இச்சைக்கு மறுத்ததால் 5 வயது சிறுவன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications