வீடு வீடாக இனிப்பு! ஸ்வீட் எடு கொண்டாடு! தேர்தல் தோல்வியை கொண்டாடிய அதிமுக வேட்பாளர்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் வீடு வீடாக இனிப்புகள் கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார்.
எல்லோரும் வெற்றிபெற்றால் தானே இனிப்புகள் கொடுத்து கொண்டாடுவார்கள், இது என்ன புதுசா இருக்கிறது என்ற வியப்புடன் பொதுமக்களில் பலரும் அந்த இனிப்பை பெற்றுக்கொண்டனர்.
அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப்போடாத பல வீடுகளில் அவர் கொடுத்த இனிப்பை வாங்க மறுத்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா ஒரு வழியாக ஓய்ந்தும் இன்னும் அதன் கொண்டாட்டங்கள் தீர்ந்தபாடில்லை. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் வாக்காளர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் நன்றி தெரிவித்தும் வரும் சூழலில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் ஒருவர் தனது வார்டு மக்களுக்கு இனிப்பு கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

வார்டு எண் 7
காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு எண் 7-ல் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுசிலா திமுக வேட்பாளரிடம் சுமார் 800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனிடையே மனம் தளராமல் தோல்வியை பரிசாக கொடுத்த மக்களுக்கு இனிப்புகளை பரிசாக கொடுத்து தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் சுசிலா. தோல்வியடைந்த நிலையில் எதற்காக இனிப்பு கொடுக்கிறார் எனத் தெரியாமல் 7-வது வார்டு வாக்காளர்கள் பலரும் குழம்பினர்.

திமுக வசம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் திமுக 32 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக பெண் கவுன்சிலர்களில் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படவுள்ளார். மார்ச் 2-ம் தேதி புதிய உறுப்பினர்களுக்கான பதவியேற்பும் 4-ம் தேதி மறைமுகத் தேர்தலும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தெரிவிக்கும்
இதனிடையே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி 12-வது வார்டில் வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர் தனது வார்டு மக்களுக்கு திருமண மண்டபத்தில் வைத்து கறிவிருந்து கொடுத்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் திமுக கவுன்சிலர்கள் பலரும் இன்னும் நன்றி தெரிவிக்கும் பயணத்தை தொடங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மார்ச் 4-ம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகு திமுக கவுன்சிலர்கள் தமிழகம் முழுவதும் நன்றி தெரிவித்து வாக்காளர்களை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications