வாரிசு அரசியலால் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்! சீனியரும் செம அப்செட்- கோர்த்துவிடும் ஜெயக்குமார்!
காஞ்சிபுரம்: திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்த காலத்தில் ஸ்டாலினை முன்னிறுத்தியதால்தான் வைகோ திமுகவிலிருந்து வெளியேறினார். அது போல் ஸ்டாலின் தலைவராக பதவி வகிக்கும் போது உதயநிதியை முன்னிறுத்துவதால் அக்கட்சியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. முதல்வர் ஒரு பக்கம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என கூறிவிட்டு இந்துக்களை இழிவுப்படுத்தி பேசுபவர்களை கண்டிப்பதில்லை.
நான் இணையும் அளவுக்கு அதிமுக, பாஜக தகுதியான கட்சிகளே இல்லை: சுப்புலட்சுமி ஜெகதீசன் சுளீர் பதில்

ஓசி பயணம்
அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்று பேசியது முகம் சுளிக்க வைக்கிறது. இவர் அவ்வாறு கூறியதிலிருந்து பெண்கள் பேருந்தில் ஏறினாலே ஓசி பயணத்திற்கு வந்துவிட்டார்கள் என சிலர் கிண்டல் செய்வதாக பெண்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது திட்டங்களுக்கு இலவசம் என்ற பெயரை தவிர்த்துவிட்டு விலையில்லா என்ற பெயரில் அழைத்தார்.

நாகரீகமே இல்லையே
அந்த நாகரீகம் கூட திமுகவினரிடம் இல்லையே. அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உதயநிதி ரசிகர் மன்றத்திற்கு தலைவராக்கிவிடலாம். அதற்கு மிகவும் பொருத்தமானவர். எப்போது பார்த்தாலும் உதயநிதியின் பெருமையை அன்பில் பாடி வருகிறார். மேலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்குமாறு திமுக தலைமையிடம் சிபாரிசு செய்து வருகிறார்.

சட்டசபை
சட்டசபை தொடங்கி அனைத்து இடங்களிலும் உதயநிதியை முன்னிறுத்தும் செயலை திமுகவினர் செய்து வருகிறார்கள். இதனால் மூத்த தலைவர்கள், அந்த கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கப்பட்டு வருகிறார்கள். கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது ஸ்டாலினை முன்னிறுத்தினார்.

வைகோ திமுக
இதனால் வைகோ திமுகவிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் வெளியேறி மதிமுக எனும் கட்சியை தொடங்கினார். அது போல் ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கும் போது உதயநிதியை முன்னிறுத்தி வருவதால் துணை பொதுச் செயலாளராக இருந்த கட்சியின் மூத்த முன்னோடி சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகிவிட்டார். உதயநிதியால் மூத்த அமைச்சர் துரைமுருகனும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். இவ்வாறு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி
திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நிலையை காரணம் காட்டி திமுகவிலிருந்து விலகியதாக கட்சியின் மூத்த நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். மேலும் அவர் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் என்று சுப்புலட்சுமியே கூறியிருந்தார். ஆனால் சொந்த கட்சியின் அமைச்சராலேயே தான் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சரஸ்வதியிடம் தோல்வியுற்றதாக குற்றம்சாட்டியே சுப்புலட்சுமி திமுகவிலிருந்து விலகினார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.