மண்டைக்கேறிய மதுபோதை! தட்டிக் கேட்ட அண்ணன் கொலை! மகனை காப்பாற்ற தாய் செய்த செயல்! கதிகலங்கிய காஞ்சி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, மது அருந்திவிட்டு தாயை தாக்கிய தம்பியை தட்டிக்கேட்ட அண்ணனை, ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை திருவேங்கடம் அவன்யூ பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்பவர், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கணவரை இழந்த இவர், சிறந்த நல்லாசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வின்சென்ட் ஜான், செல்லி ஜான் என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லுரியில் படித்து வரும் நிலையில், இளையமகன், பச்சையப்பன் பள்ளியில் ப்ளஸ்- 2 படித்து வருகிறார்.

மதுபோதைக்கு அடிமை
தந்தை இறப்புக்குப் பின்னர், இரண்டாவது மகன் செல்லி ஜான் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு, வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிடுவதை செல்லி ஜான் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அதன்படி, நேற்று இரவும் வழக்கமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வருகிறாயே என அவரது தாய் செல்வராணி, மகனை கண்டித்தாக கூறப்படுகிறது.

தாயுடன் சண்டையிட்ட மகன்
மதுபோதையில் இருந்த செல்லி ஜானுக்கு, தாய் கண்டித்ததால் ஆத்திரம் தலைக்கேறியது. இதனையடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை தாக்கியதோடு, சண்டையும் போட்டதாக தெரிகிறது. மதுபோதையில் தாயை தாக்கிய தம்பியை, வீட்டில் இருந்த அண்ணன் வின்சென்ட் ஜான் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அண்ணன், தம்பிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணன் கொலை செய்த தம்பி
அண்ணனுடன் சண்டையிட்ட தம்பி செல்வி ஜான், ஆத்திரத்தில் வீட்டின் சமையல் அறைக்குச் சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, அண்ணன் வின்சென்ட் ஜானின் மார்பு பகுதியில் பலமாக குத்தியுள்ளார். மதுபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல் தம்பி செய்த இந்த காரியத்தால், அண்ணன் வின்சென்ட் ஜான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் நாடகம்
இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் செல்வராணியும், தம்பி செல்வி ஜானும், வின்சென்ட் ஜானின் உடலை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்களிடம், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால், மகன் மீது குத்திவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, மருத்துவர்கள் வின்சென்ட் ஜானை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காவல் துறை விசாரணை
உயிரிழந்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், உடனடியாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், வின்சென்ட் ஜானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த தம்பியே, தட்டிக்கேட்ட உடன் பிறந்த அண்ணனை கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. மேலும் கொலையை மறைப்பதற்கு, தாயும், மகனும் மருத்துவமனையில் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது. இதனயைடுத்து, கொலை செய்த தம்பி செல்வி ஜானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications