வடகலையா? தென்கலையா? சாமி முன்பே சண்டைபோட்ட அர்ச்சகர்கள்.. களேபரமான காஞ்சிபுரம் கோயில்
காஞ்சிபுரம்: மண்டகப்படியின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே வெடித்த மோதல் காரணமாக காஞ்சிபுரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் முகம் சுளித்தனர்.
தமிழ்நாட்டில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். வழிபாடுகள், சடங்குகள் செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. கடந்த ஆண்டு கூட காஞ்சிபுரத்தில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அர்ச்சகர்களுக்கு இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது. கடந்த புதன்கிழமை கோயிலில் வைகாசி பிரமோற்சவத்துக்கான கொடியேற்றம் தொடங்கியது. 3 ஆம் நாள் காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இரவு அனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் கோயிலில் இருந்து சுமார் 8 மணிக்கு மேல் வீதி உலா நடந்தது. அப்போது கோயிலில் இருந்து வடகலை பிரிவினரின் வேத பாராயணங்கள் முழங்கியபடி சங்கரமடம் அருகே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் மண்டகப்படியாக கண்டருளி பட்டாச்சாரியார்களின் வேத பாராயணங்கள் பாடப்பட்டன.
இந்த நிலையில் வேத பாராயணம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே லேசான உரசல் ஏற்பட்டு சலசலப்புடன் காணப்பட்டது. அதன் பின்னர் நித்தியபடி பூஜைகளும் நடந்தன. அப்போது சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங்கும்போது வடகலை பிரிவினர் வேத பிராயணம் பாடிக்கொண்டு வந்தனர்.
அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அதனை வீடியோ எடுத்தவர்களின் செல்போன்களை அர்ச்சகர்கள் தட்டி விட்டனர். இந்த மோதல் காரணமாக கடுமையாக கூச்சல் குழப்பம் நிலவியது.
அர்ச்சகர்களின் மோதல் காரணமாக விழாவுக்கு வந்த பக்தர்கள் முகம் சுளித்தபடி சென்றனர். சிலர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வடகலை அர்ச்சகர்கள் மற்றும் தென்கலை அர்ச்சகர்கள் இடையிலான மோதலால் அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.
மோதல் காரணமாக மண்டபப்படி எழுந்த இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு, நள்ளிரவில்தான் திருக்கோவிலை சாமி சென்றடைந்தது. பல ஆண்டுகளாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே வேத பாராயணம் பாடுவதில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று இரு தரப்பினரும் வேத பாராயணம் பாட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவினர் மேல் முறையீடு செய்த நிலையில், முந்தைய உத்தரவே தொடரும் என தீர்ப்பு வெளியானது. ஆனால், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகும் வரை தென்கலை பிரிவினர் வேத பாராயணம் பாடாமல் இருந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications