திறக்காத வீடு.. உள்ளே சென்ற அண்டை வீட்டார்! பிணமாக கிடந்த தாய், தந்தை, மகள் - அதிர்ந்த கன்னியாகுமரி
கன்னியாகுமரி: அருமனை அருகே குடும்பத்தோடு மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்துள்ளது வெள்ளாங்கோடு பகுதி. இந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வருபவர் கிருஷ்ணங்குட்டி.
இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகள் நித்யாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மகள் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

விவாகரத்து
இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணன் குட்டியின் மகள் நித்யா கணவருடன் விவாகரத்து பெற்றுக் கொண்டு தந்தை வீட்டுக்கு திரும்பிவிட்டார். தனது மகள் நித்யாவின் திருமணத்திற்காக கிருஷ்ணன் குட்டி பல லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

மன உளைச்சல்
இந்த கடனை அடைக்க முடியாமல் இருந்து வந்த கிருஷ்ணன் குட்டி, எந்த திருமணத்துக்காக கடன் வாங்கினாரே அந்த திருமணமே முடிவுக்கு வந்துவிட்டதால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். ஏற்கனவே கடன் தொல்லையால் அவதி பெற்று வந்த கிருஷ்ணன் குட்டியும் அவரது குடும்பத்தினரும் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

தற்கொலை
இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணன் குட்டி வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து இருக்கின்றனர். உடனே அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணன் குட்டி, மனைவி ராஜேஸ்வரி, மகள் நித்யா ஆகியோர் விஷம் அருந்தி உள்ளனர். மூவரும் பிணமாக கடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

போலீஸ் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருமனை போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications