பாலியல் புகார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது..பண்ணை வீட்டில் பதுங்கல்..தட்டி தூக்கிய போலீஸ்
பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டிய புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி: பல பெண்களுடன் பழகி..அவர்களுடன் நெருக்கமாக புகைப்படமும் வீடியோவும் எடுத்து மிரட்டிய பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கன்னியாகுமரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலீசிற்கு பயந்து பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பென்டிக்டை இன்று காலையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ 29, பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த சில நாட்களாக இவர் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
மேலும் சில பெண்களிடம் பாதிரியார் வாட்ஸ் அப் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமறைவு
தலைமறைவான பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் எஸ்.பி ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கேரளா அல்லது பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் கைப்பற்றிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்தனர். அதில் மேலும் பல ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளது தெரிய வந்தது.

காசியை விட அதிக வீடியோக்கள்
நாகர்கோவிலில் பல இளம்பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் ரீதியான வீடியோக்கள் எடுத்துத் தொல்லை கொடுத்தவன் காசி. இப்போது சிறையில் உள்ளார். காசிக்கே சவால்விடும் வகையில் தான் பணிசெய்யும் சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி உறவில் ஈடுபட்ட பாதிரியார் பற்றி தினம் தினம் பல வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வீழ்த்தியது எப்படி
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தான் பணி செய்யும் இடங்களில் எல்லாம் தேவாலயத்திற்கு வரும் இளம்பெண்களை, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளை பிரார்த்தனையின் போது ஆறுதல் சொல்வது போல் தொட்டு பேசி மயக்கிவிடுவார். தொடர்ந்து அவர்களிடம் நெருக்கமாகப் பழகி, அதை வீடியோவாகவும், வாட்ஸ் அப் கால், ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துவைத்துக்கொண்டு பாலியல் தொல்லை செய்து மிரட்டுவாராம்.

ஆபாச எஸ்எம்எஸ்
இவர் மீது குமரிமாவட்டம், ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த மினி அஜிதா என்பவர், தன்னுடன் படிக்கும் மாணவிக்கு பாதிரியார் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதை என் மகன் தட்டிக்கேட்டார். இதனால் பாதிரியார் பொய் புகார் கொடுத்து என் மகன் கைது செய்யப்பட்டார். பாதிரியாரின் செல்போனை ஆய்வுசெய்ய வேண்டும் என எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோல் எஸ்.பி அலுவலகத்தில் பெங்களூரூவில் நர்சிங் படிக்கும் குமரி மாணவி ஒருவரும் பாதிரியார் மீது பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார்.

பண்ணை வீட்டில் கைது செய்த போலீஸ்
இதனைத் தொடர்ந்து குமரிமாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர்,பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது தெரிந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியாரை இன்று காலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications