காஞ்சிபுரத்தில் பஸ் ஸ்டாண்டில் மின்னிய தங்க நகைகள்! இப்ப கன்னியாகுமரி பாத்ரூமில் தவெக பெண் நிர்வாகி
கன்னியாகுமரி: படித்த பெண்கள், குறிப்பாக மிக முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள், திருட்டு கேஸில் கைதாகி வருவது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. சமீபகாலமாகவே, இளம்பெண்களின் திருட்டு கேஸ்களும் பெருகி வரும்நிலையில், கைது நடவடிக்கைகளும் அதிகரித்தவாறே உள்ளது.. காஞ்சிபுரத்தை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் ஒரு பெண் கைதாகி உள்ளார்.. என்ன நடந்தது நாகர்கோவிலில்?
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வரலட்சுமிக்கு 52 வயதாகிறது.. இவர், கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீடு திரும்புவதற்காக காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

அப்போதுதான் அவரது பையில் வைத்திருந்த தாலி செயின் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சுற்றுமுற்றும் பல இடங்களில் தேடியும் அந்த தாலி செயின் கிடைக்கவில்லை. உடனே கோயம்பேடு போலீஸில் வரலட்சுமி புகார் தந்தார்..
அந்த புகாரில், உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வருவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, என் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் அந்த பெண்தான் நகையை திருடியிருப்பார் என சந்தேகமாக உள்ளது. என்னுடைய செயினை கண்டுபிடித்து தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
300 சிசிடிவி கேமராக்கள்
இந்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் வரலட்சுமியை பின்தொடர்ந்து ஒரு பெண் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
உடனே அந்த பெண்ணின் அடையாளத்தை வைத்து, அவரை போலீசார் தேடி வந்தபோது, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் சிகிச்சைக்காக வந்திருப்பது தெரியவந்தது.. உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, ஆடிப்போனார்கள்.
ஊராட்சி மன்ற தலைவி
காரணம், திருப்பத்தூர் மாவட்டம், நரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி (53) என்பது தெரியவந்தது. ஊராட்சி தலைவி என்பதால், இவர்தான் நகை திருடினாரா? என்று போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது... ஊராட்சி மன்ற தலைவி என்றதுமே, அவரிடம் விசாரிப்பதிலும் தயக்கம் காட்டினார்கள்.
இதனால் மறுபடியும் மறுபடியும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.. இறுதியில், நகையை திருடியது, சாட்சாத் ஊராட்சி மன்ற தலைவியேதான் என்பது உறுதியானது..
அதற்கு பிறகே அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது அடுத்த அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது.. இவர் மீது ஏற்கனவே வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பண மோசடி உட்பட்ட 10 திருட்டு கேஸ்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருட்டு சம்பந்தமாக ஜெயிலுக்கும் பேய் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்..
திருடினால் சந்தோஷமாக இருக்கு
போலீசாரிடம் பிடிபட்ட பாரதி சொல்லும்போது, "ஊராட்சி மன்ற தலைவி பதவியில் 4 வருடமாக உள்ளேன். எனக்கு பண வசதி, செல்வாக்கு எல்லாம் இருக்கிறது.. ஆனாலும், திருட்டின் மீதான ஆசையால் அவற்றை கைவிட முடியவில்லை. எதற்காக திருடுகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் திருடினால் மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தது தெரியவந்ததால் என்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிபோகும். என்னை மன்னிச்சிடுங்க.. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் 6 சவரன் செயின் திருடியது நான்தான். இனிமேல் திருட்டில் ஈடுபட மாட்டேன்" என்றார்.. இப்போது பாரதி புழல் ஜெயிலில் உள்ளார்.
தவெக இணை செயலாளர்
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் இன்னொரு பெண் பிரபலம் நகை திருட்டில் ஈடுபட்டு அசிங்கப்பட்டுள்ளார்.. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.. 28 வயதான இவர், நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.
அதேபோல, விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியை சேர்ந்த அர்ஷிதா டிப்னி என்ற 23 வயது பெண், திண்டிவனத்தில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சி தமிழக வெற்றிக்கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பிலும் பதவி வகித்து வருகிறார்.
டிரெய்னிங்குக்காக நாகர்கோவில் கோர்ட்டுக்கு வரும்போது விஜயகுமாருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.. பிறகு 2 பேரும் நட்பாக பழகிவந்தனர்.. கடந்த 12.7.2025 அன்று, விஜயகுமாருக்கு வீட்டிற்கு அர்ஷிதா சென்றிருக்கிறார்.. விஜயகுமார், வீட்டுக்கு வெளியே தன்னுடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் வீட்டிலிருந்த பாத்ரூமுக்கு அர்ஷிதா சென்றுள்ளார்.. 10 நிமிடம் கழித்து அர்ஷிதா அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
அர்ஷிதா ஜெயிலில்
அதன்பிறகுதான், தன்னுடைய அம்மாவின் ரூமிலிருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் விஜயகுமார்.. உடனே இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் அர்ஷிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது நகைகளை திருடியதை அர்ஷிதா ஒப்புக் கொண்டார்.. இப்போது இவரும் கைதாகி ஜெயிலில் உள்ளார்.
படித்த இளம் வயது பெண்கள், அதுவும் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், இப்படி பொதுவெளியில் அசிங்கப்பட்டு கைதாகி வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications