பெண்ணுடன் நடனமாடிய மதபோதகர்? வீடியோ பதிவிட்ட கனல் கண்ணன்.. கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக வழக்கு!
கன்னியாகுமரி: மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தமிழ் பாடலுடன் எடிட் செய்து ட்விட்டரில் இந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கனல் கண்ணன் தற்போது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவரது பேச்சு மற்றும் சமூக வலைதள பதிவுகள் தான். சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரேயுள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். இது அவ்வப்போது விவாதத்தை கிளப்பி வரும் நிலையில் தான் தற்போது அவர் மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது கடந்த 18 ம் தேதி மாலை 5.50 மணிக்கு கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த வீடியோவில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மத போதகர் உடை அணிந்து பெண்ணுடன் நடனம் ஆடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் பாடம் இசைக்கிறது.
மேலும் இந்த பதிவில் கனல் கண்ணன், ‛‛வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்??? மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!'' என பதிவிட்டு இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. மேலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கிறிஸ்தவ மதத்தை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்த திமுக ஐடி பிரிவு துணை அமைப்பாளர் ஆஸ்டின் பெனட் என்பவர் கன்னியாகுமரி எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதில் இந்து முன்னணி கட்சியை சார்ந்த சினிமா ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று ஒரு கிறிஸ்தவ மத போதகர் பெண்ணுடன் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை தமிழ் இசையுடன் சேர்த்து எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளார்.
மேலும் மதப்பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது இந்திய தண்டனை சட்டம் 295-ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படுதல்) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications