கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டது எப்படி.. இப்போது எப்படி இருக்கு.. கலெக்டர் விளக்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள கடலின் நடுவே திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தில் சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்தில் இருந்து 6-வது கண்ணாடியின் மேல் விழுந்தது. இதில் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் விழுந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் கண்ணாடி நடைபாலம் உறுதியாகத் தான் இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள கடலில் திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி பாலம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. மூன்றுபக்கமும் கடலால் சூழப்பட்ட கன்னியாகுமரி, இந்தியாவின் முதல் நிலப்பரப்பு என்று கூறலாம். அதேபோல் ஒரேஇடத்தில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

விரிசல் எப்படி ஏற்பட்டது
இதனை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரிக்கு எப்போதுமே அலைமோதும். சுற்றுலா பயணிகள் பலருக்கும் கண்ணாடி பாலத்தில் நடப்பது மிகவும் பிடிக்கும். இந்நிலையில் இந்த கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் என்ன நடந்தது. ஏன் விரிசல் ஏற்பட்டது? தற்போதைய நிலை என்ன என்று து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார்.
கலெக்டர் விளக்கம்
கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட விளக்கத்தில் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைத்து கண்ணாடி இழை பாலம் கட்டப்பட்டது. இதுவரை சுமார் 17.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர். இந்த கண்ணாடி பாலம் தகுதியான வல்லுனர்களை கொண்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுத்தியல் விழுந்தது
கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி அன்று பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மூலம் பாலத்தின் மேல்பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக பணியாளர் கையில் இருந்த ஒரு சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்தில் இருந்து 6-வது கண்ணாடியின் மேல் விழுந்தது. இதில் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது.
4 அடுக்குகள்
இதன் பிறகு கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் கண்ணாடி புதிதாக செய்வதற்கு ஒப்பந்ததாரர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கண்ணாடி மொத்தம் 4 அடுக்குகளாக உள்ளதால், உரிய பாதுகாப்பு நடைமுறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி அன்று கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது.
ஜெனரேட்டர் மூலம் பொருத்த நடவடிக்கை
அதனை தொடர்ந்து நிறுவனத்தின் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி அன்று கண்ணாடி சோதனை செய்யப்பட்டது. இந்த கண்ணாடியை பாலத்தில் பொருத்துவதற்கு 3 பேஸ் மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், தற்போது ஜெனரேட்டர் மூலம் கண்ணாடி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது
இந்த பணியானது இரு தினங்களில் நிறைவுபெறும். கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்றுள்ளனர். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை தொடர்ந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications