தந்தை இல்லை! சுய நினைவில்லாத தாயை பராமரித்தபடியே 573 மார்க் வாங்கிய கோகிலா.. சபாஷ்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தந்தையை இழந்து சுயநினைவு இல்லாத தாயையும் பராமரித்துக் கொண்டே பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 573 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 7.60 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 397 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி உள்ளது.
இதுகுறித்து மாணவி கூறுகையில் என் பெயர் பி.ஆர்.கோகிலா. நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். தமிழகத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் நான் 573 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். என் தந்தையின் பெயர் பார்த்தசாரதி. என் தந்தை கல்லீரல் செயலிழப்பால் 2019ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனது அம்மாவுக்கு 2012 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் சுயநினைவை இழந்துவிட்டார்.
எனது தந்தை இறந்துவிட்டதால் என் அக்காவால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதனால் எனது பெரியம்மாவுடன் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவர் சம்பாதிக்கும் பணத்தில்தான் எனது படிப்பு, வீட்டுச் செலவு எல்லாமே! அது போல் பெரியம்மா, பெரியப்பாவும் எனக்கு பொருளாதார ரீதியில் உதவி வருகிறார்கள்.
நான் 4 முக்கிய பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். எனது ஆசிரியர்கள் என்னை ஊக்கமளித்தனர். எனக்கு பி.காம் பேங்கிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு எனக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது.

இந்த மாணவி தமிழில் 93, ஆங்கிலத்தில் 80, பொருளாதாரம், கணக்கியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வணிகவியல் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவியின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய மூத்த சகோதரி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார்.
இதனால் வீட்டில் தனது தாயையும் பார்த்துக் கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தி 573 மதிப்பெண்களை பெற்றது உண்மையில் சாதனைதான். இதனால் அவருடைய குடும்பத்தினர் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். மாணவி கேட்டது போல் அவர் படிப்பதற்கு தமிழக அரசோ தன்னார்வலர்களோ உதவினால் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications