வங்கக்கடலில் காற்றழுத்தம் 'வலிமை'..ஆழ்கடலை விட்டு உடனே வெளியேருங்கள்..மீனவர்களுக்கு அழைப்பு
குமரி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலிமையடைவதால் கடலில் மணிக்கு 55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரியில் மீனவ கிராம ஆலயங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மீன் ஏல கூடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரை நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி, நேற்று காற்றழுத்தமாக மாறியது. அது மன்னார் வளைகுடா பகுதி மற்றும் வட இலங்கை பகுதியை நெருங்கி வந்தது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இது தவிர இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி, அந்தமான் பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி என 3 காற்று சுழற்சிகள் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வருவதால், மன்னார் வளைகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இந்த 3 காற்று சுழற்சியும் இன்று இணையும். அதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை புரட்டிப்போட்ட மழை.. 1990க்கு பிறகு ஒரேநாளில் அதிகம்.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

தமிழகத்தில் மழை
தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் மிதமான அளவு மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தக்கலை, கீழ் அணைக்கட்டு, மாமல்லபுரம், திருவாடானை, ராமேஸ்வரம், சிவலோகம், கொடுமுடி, குமரியில் தலா 2 செ.மீ. மழையும், மணிமுத்தாறு, பொன்னேரி, ராதாபுரம், கோடியக்கரை, அய்யம்பேட்டை, அம்பாசமுத்திரம், நாங்குனேரியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அதி கனமழை
காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும், இன்று நள்ளிரவு முதல் வடதமிழகத்திலும் மழை பெய்யும். 11ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கனமழை இருக்கும். இது தவிர கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, பகுதிகளிலும் 11, 12, 13ம் தேதிகள் வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

25 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு
இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால் அதிகபட்சமாக 20 செமீ முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை பொறுத்தவரையில் 6 செமீ, மிக கனமழை 11 செமீ, அதிக கனமழை 15 செமீ, அதீத கனமழை 20 செமீ வரையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கெங்கு மிக கனமழை
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
10 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

படகுகள் நிறுத்தி வைப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து பழவேற்காட்டில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மீனவர்களுக்கு அழைப்பு
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலிமையடையக்கூடும் எனவும் வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வரை காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரியில் மீனவ கிராம ஆலயங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மீன் ஏல கூடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.