முட்டத்தில் இஸ்திரி பெட்டியால் அடித்து தாய், மகள் கொலை.. முக்கிய ஆதாரமாக சிக்கிய மங்கி குல்லா!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயும் மகளையும் இஸ்திரி பெட்டியால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது. கொலையாளிகளின் முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லா வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

ஆன்றோ மனைவி
இந்த நிலையில் ஆன்றோவின் மனைவி பவுலின்மேரி மட்டும் அவரது தாயார் திரேசம்மாளுடன் முட்டம் பகுதியில் வசித்து வந்தார். இவர்கள் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு திரேசம்மாள், பவுலின் மேரி ஆகிய இருவரும் உறவினர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.

உறவினர்கள்
இதையடுத்து மறுநாள் 7ஆம் தேதி அதே உறவினர்கள் பவுலின் மேரிக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் 7ஆம் தேதி மதியம் பவுலின் மேரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் இருந்தது. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

ரத்த வெள்ளம்
அப்போது தாயும் மகளும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக அவர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

பங்களா வீட்டில் கொள்ளை
முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதோடு வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டியால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி என 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மோதிரம்
ஆனால் அவர்கள் கையில் கிடந்த மோதிரத்தையும் காதில் இருந்த காதணியையும் எடுக்கவில்லை. அது போல் வீட்டில் பீரோவை உடைத்து திருடர்கள் திருட முயற்சிக்காமல் கதவை பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதன் மூலம் 70 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது.

70 சவரன் பீரோவில் நகை
எனவே இந்த கொலை நகை, பணத்திற்காக நடந்ததாக இருக்காது. 70 சவரன் பீரோவில் இருக்கும் நிலையில் அதைவிட்டுவிட்டு வெறும் 16 சவரனுக்கு கொள்ளையடித்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் 5-தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

3 நாட்கள்
கடந்த மூன்று நாட்களாக கொலையாளிகள் குறித்த எந்த ஆதாரங்களோ தடயங்களோ சிக்காத நிலையில் இரண்டு தனிப்படை போலீசார் கொலை நடந்த பங்களா வீட்டில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தடயங்கள் ஆதாரங்களை சேகரித்து வந்த போலீஸார், அந்த பங்களா வீட்டின் அருகே உள்ள தென்னம் தோப்பில் இருந்து குளிர் பிரதேசத்தில் வசிப்போர் பயன்படுத்தும் மங்கி குல்லா ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

குல்லா யாருடையது
இந்த குல்லா யாருடையது என்றும் பவுலின் மேரியின் கையில் அகப்பட்டிருந்த கொலையாளியின் தலை முடியையும் டி.என்.ஏ மரபணு சோதனைக்கு அனுப்பி அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் கொலை நடந்த பகுதியில் அவ்வப்போது முகாம் இடும் முட்டம் பகுதியை சேர்ந்த கஞ்சா கும்பலை சேர்ந்த சிலர் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

டிஎஸ்பி தங்கராமன்
தற்போது குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி தங்கராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொலையாளிகள் குறித்த முக்கிய தடயமாக மங்கி குல்லா ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதை யாரேனும் விற்பனை செய்திருந்தாலும் பொதுமக்களுக்கு தெரிந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
