இதேதான் பிளான்! தியானம் செய்ய கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி! 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி: விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் 3 நாள் தியானத்துக்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தடைந்தள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரியாகும். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திப்பு புள்ளியாகவும் கன்னியாகுமரி உள்ளது. அத்துடன், சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரியாகும்..

நினைவிடம்: சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி, 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளார்..
தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஆன்மீக பயணத்தை பிரதமர் மேற்கொள்ள போகிறார். இதற்காக டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் பிரதமர் மோடி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடுக்கு பிரதமர் மோடி வந்திறங்கினார்.
இதையடுத்து பிரதமர் மோடி காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கடல் நடுவேயுள்ள விவேகானந்தா் பாறைக்கு படகில் பிரதமர் மோடி சென்றார். தமிழர் பாரம்பரிய உடையான பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து பிரதமர் மோடி அங்கு சென்றார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அடைந்ததும், அதனை அவர் சுற்றிப்பார்த்தார். அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்கினார். அதன்பிறகு நினைவிடத்தில் உள்ள விவேகானந்தர் சிலையின் முன்பு பூவைத்து பிரதமர் மோடி வணங்கினார். மேலும் அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்துக்கும் பிரதமர் மோடி மலர்தூவி வணங்கினார். அதனைத் தொடர்ந்து 31ம் தேதி முழுவதும் தனிமையில் தியானத்தில் ஈடுபட உள்ளார்.
நடுக்கடலில்: பிறகு கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சனிக்கிழமை அதாவது ஜூன் 1 பிற்பகல் வரை அவர் தங்கி இருக்கிறார். 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்டப பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார். அன்றைய தினம் பிற்பகல் மீண்டும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது
பிரதமா் மோடியின் தியான நிகழ்ச்சியையொட்டி, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு: பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கன்னியாகுமரி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 8 எஸ்.பி.க்கள் அடங்கிய 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற் றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல்3 நாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவையும் நேற்றுபகல் 12 மணியில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளிலும், கடல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்புகள் தொடர்ந்து நடக்கின்றன.












Click it and Unblock the Notifications