அரசு ஊழியருக்கு ஒரே நாளில் ட்விஸ்ட்.. கன்னியாகுமரி அருகே பொதுப்பணித்துறை அதிகாரி சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருவட்டார் தாலுகா அருவிக்கரை கிராமம் மணற்குன்று பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் பெரும் குளம் என்ற பாசன குளம் இருக்கிறது. இந்த குளத்தில் வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொதுப்பணித்துறை ஊழியரை, கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா அருவிக்கரை கிராமம் மணக்குன்று பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் பெரும்குளம் என்ற பாசன குளம் இருக்கிறது. இந்த குளத்தில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க பொதுப்பணித்துறை அனுமதி வேண்டும். எனவே அதே பகுதியைச் சேர்ந்த ராமையன் என்ற விவசாயி மாவட்ட கலெக்டருக்கு வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் செய்திருந்தார். இதை தொடர்ந்து ராமையனுக்கு பெரும் குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் குளத்தில் இருந்து வண்டல் மண்ணை டெம்போக்களில் எடுத்துச் செல்ல குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெற வேண்டியது அவசியம் ஆகும். இந்த அனுமதி சீட்டை பெற ராமையன் நியமித்த ஒப்பந்ததாரரான ஆற்றூர் புளிமூட்டைச் சேர்ந்த பிரைட் (வயது 52) என்பவர் கடந்த 2-ந் தேதி செருப்பாலூர் பொதுப்பணித்துறை அலுவலக பாசன உதவியாளர் ஜெஸ்டின் என்ற ரசல்ராஜை (48) கேட்டுள்ளார்.
அப்போது ஜெஸ்டின், இலவச அனுமதி சீட்டு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்ச பணம் கொடுக்க பிரைட் விரும்பவில்லை..எனினும் சமயத்தில் ஜெஸ்டினிடம், வீட்டுக்கு சென்று பணத்தை கொண்டு வருவதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் லஞ்சம் கேட்ட ஜெஸ்டினை சிறையில் கம்பி எண்ண வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட், நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் உடனடியாக ரசாயன பவுடர் தடவிய நோட்டுக்களை பிரைட்டிடம் கொடுத்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெஸ்டினிடம் சென்று கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.
அதன்படி பிரைட் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்துடன் நேற்று மதியம் செருப்பாலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றார் . அங்கு லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை ஜெஸ்டினிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி சால்வன் துரை, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் தலைமையில் போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்து லஞ்ச பணத்துடன் அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். பிறகு அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிந்து ஜெஸ்டினை போலீசார் கைது செய்தனர். வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பொதுப்பணித்துறை ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications