டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனத்தில் தாமதம்.. பாதகத்தை ஏற்படுத்தும்.. சகாயம் ஐஏஎஸ்
கன்னியாகுமரி: தமிழக அரசின் நீட் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சகாயம் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் அரசுப் பணியிடங்களுக்கு தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வழிகாட்டி வருகிறேன்.

அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிட வேண்டும் என தொடர்ந்து நான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். நீட் தேர்வை பொருத்தமட்டில் பொதுவான ஒரு தேர்வை நடத்துவதற்கு பொதுவான பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு இந்த தேர்வைச் சந்திப்பது கடினமாகும்.
அரசு பள்ளிகளில் இருந்து வரக் கூடிய மாணவர்களுக்கு இது பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே நீட் தேர்வு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. வாக்களிப்பது நம் வலிமையான உரிமை. இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. அதன் அடித்தளம் என்பது ஒரு வாக்காளன் தன்னுடைய உரிமையை மிக நேர்மையாக மிகச் சரியாக பயன்படுத்துவதுதான்.
இதில் வாக்களிப்போர் ஜாதி, மதத்தை சேர்ந்தவர், ஊர்க்காரர், கட்சிக்காரர்கள் என்றெல்லாம் பார்த்து வாக்களிக்கக் கூடாது. எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார், பொதுச் சொத்தை திருட மாட்டார், இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மாட்டார் என்பதை பார்த்து நல்ல மனிதர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். காசுக்கு வாக்களிக்கும் கயமை செயலுக்கு அவர்கள் துணை போக கூடாது.
வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்கும் அரசியல்வாதிகளை மொத்த சமூகத்தையுமே ஊழல்வாதிகளாகவே மாற்றுகிறார்கள். இது அபாயகரமான ஒன்று. தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோர் அல்லது 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் மரபு வழியாக நாம் செய்து வந்த தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. கிராமிய கட்டமைப்பு சிதைந்து விடுகிறது.
விவசாயம் பொய்த்து போகிறது. விவசாயத்தில் வருமானம் இல்லை. விவசாயத்திற்கு பிறகு வெகு மக்கள் ஈடுபட்டு வந்த நெசவுத் தொழில் எல்லாம் நசுங்கி போய்விட்டன. மரபு வழியாக நாம் செய்து வந்த தொழில்கள் நசுங்கி போனதால் நாம் புதிய புதிய வேலைகளை தேடி நகரங்களுக்கு செல்லக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது. எனவே இந்த வேலைவாய்ப்பு பிரச்சினைகள் எல்லாம் அதிதீவிர பிரச்சினைகள்தான்.
எனவே ஒன்றிய அரசு, மாநில அரசு இவையெல்லாம் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த வேலைவாய்ப்பின்மையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் அவருடைய ஒத்திசைவை அளிக்காமல் கோப்புகளை திருப்பி அனுப்பியதாக நான் அறிகிறேன்.
ஏற்கெனவே லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தக் கூடிய தேர்வுகளை எல்லாம் முறையாக ஒழுங்காக காலத்திற்குள் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். இது போன்ற நியமனங்களில் தடை ஏற்படுத்துவது நிச்சயம் பாதகத்தை ஏற்படுத்தும் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications