சிவாலய ஓட்டம்.. கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் 2 நாட்கள் கனரக லாரிகள் நுழைய தடை - எஸ்பி ஸ்டாலின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கும் நிலையில் மாவட்டத்திற்குள் 2 நாட்கள் கனிமவள கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. சிவன் கோயில்களுக்கு ஓடும்போது "கோபாலா... கோவிந்தா..." முழக்கம் இருக்கும். பக்தர்கள் கையில் பனை ஓலையினால் செய்யப்பட்ட விசிறியை வைத்திருப்பார்கள். ஆன்மிக ரீதியாக - விசிறி வீசும்போது எப்படி நம் உடல் வெப்பம் தணிகிறதோ, அதேபோல் நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம் போன்ற அசுத்தமான எண்ணங்களை விசிறி எறிந்துவிட்டுத் தூய்மையான மனதோடு இறைவனை அடைய வேண்டும் என்பதை குறிக்கும்.

மேலும் இந்த ஓட்டத்தில் பக்தர்கள் இடுப்பில் ஒரு சிறிய துணிப் பையில் திருநீறு வைத்திருப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் தரிசனம் செய்த பிறகு, அங்கிருக்கும் புனித மண்ணையோ அல்லது விபூதியையோ அதில் சேகரிப்பார்கள். 12 கோயில்களிலும் சேகரித்த அந்தப் புனிதப் பொடியை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பது ஒரு ஐதீகம் ஆகும்.
இந்த ஓட்டம் முஞ்சிறை முதல் நட்டாலம் வரை சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் கடக்க வேண்டும். காலணிகள் (செருப்பு) அணியாமல் வெறும் காலால் ஓடுவது இன்றும் பல பக்தர்களின் வழக்கமாக உள்ளது. சிவாலய ஓட்டம் முடியும் 12-வது கோயில் திருநட்டாலம். இங்கே ஒரு விசேஷம் உண்டு. இங்குள்ள மூலவர் சங்கரநாராயணர் (சிவனும் விஷ்ணுவும் இணைந்த கோலம்). 11 கோயில்களில் சிவனை மட்டும் தரிசித்த பக்தர்கள், இறுதியில் ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற உண்மையை உணர்ந்து இங்கே ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள்.
7 நாட்களும் மிகக் கடுமையான விரதம் இருந்து சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கும் நிலையில் மாவட்டத்திற்குள் 2 நாட்கள் கனிமவள கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடிச் சென்று தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் துறையினர் செய்துள்ளனர்.
குறிப்பாக சிவால ஓட்டம் நடைபெறும் பாதையில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து என மொத்தம் 44 இரு சக்கர வாகனத்தில் 88 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வாகன நிறுத்த வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.
முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ 'மே ஐ ஹெல்ப் யூ' மையம் நிறுவப்படும். பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. பெண் பக்தர்களுக்கு உதவ பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள்.
சிவாலய ஓட்டம் நடைபெறுவதையொட்டி இன்றும், நாளையும் கனிம வள டாரஸ் மற்றும் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications